முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில

தமிழ் குர்ஆன் மென்பொருள்

   

Go To Index


சுனாமி...!

பரந்து விரிந்த இப்பூவுலகின் உன்னத இனம் மனித இனம்...! படித்துப் படித்துச் சளைத்துப்போய், உழைத்து உழைத்துக் களைத்துப்போய் குடும்பச் சுமையில் நலிந்துபோய், இதமான சுகம் தேடும் வேளையில் மனிதனின் கண்ணுக்கும், மனதுக்கும் குளிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் அள்ளித்தரும் இடங்கள்தான் இறைவனின் வல்லமையைப் பறைசாற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள்...!

அலைபாயும் கடல் என்றும், முகில் தொடும் மலைகள் என்றும், ஒலித்தோடும் ஆறுகள் என்றும் இலவசமாய் இன்பத்தை இடைவிடாது அளித்துவரும் இடங்களை நோக்கியே மனித இனம் அலையலையாய் திரண்டு செல்வதை வழமையாக்கிக் கொண்டிருந்தது... சில மாதங்களுக்கு முன்பு வரை...!

சுகம் மட்டும் தரும் இடங்கள் என்று மனிதன் எவற்றையெல்லாம் கண்டு மகிழ்ச்சிக் கடலில் மிதந்தானோ அவை எதுவாயினும் அவனுக்கு சுமையையும், ஆற்ற முடியாத துக்கத்தையும் கூட அள்ளித்தரும் வரிமையுடையவை என்பதை கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாள் அவன் நன்றாகவே உணர்ந்துகொண்டான்...! ஆம்... அதற்குப் பெயர் சுனாமியாம்...!

சுனாமி...! இப்பெயரை 2004, டிசம்பர் 25ஆம் தேதி வரை பெரும்பாலும் யாரும் கேட்டதே இல்லை. ஆனால், மறுநாள் தொட்டு அப்பெயரைக் கேள்விப்பட்டாலே இம்மனிதனின் மனதில் இனம் புரியாத கலக்கம்...! பயம்...!

வெள்ளம், பூமி அதிர்ச்சி (பூகம்பம்), எரிமலை வெடிப்பு, காட்டுத் தீ, புயல் போன்றவைதான் இயற்கைச் சீற்றங்கள் என்று மனிதன் அறிந்து வைத்திருந்தான். இச்சீற்றங்கள் கூட அவ்வப்போது, ஒவ்வொரு பகுதிகளில் நடைபெறும் நிகழ்வாகத்தான் இருந்தன. ஒரு பகுதியில் நடக்கும் இச்சீற்றம் வெகு தொலைவிலுள்ள மற்றொரு பகுதியை நெருங்காது என்று மனிதன் இதுவரை நம்பிக் கொண்டிருந்தான்.

ஆனால், உலகின் எங்கோ ஓரிடத்தில் ஏற்பட்ட பூகம்பம்... அது மணல் பரப்பைக் கடந்து கடல் பரப்புக்குத் தாவி... கடல் கொந்தளிப்பு என்ற நிலையை உருவாக்கியது! எங்கேயோ ஏற்பட்ட இந்தக் கொந்தளிப்பு அந்தப் பகுதியை மட்டும் பாதிக்காமல், ஒட்டுமொத்தமாக பல ஊர்களையும், பெரு நகரங்களையும், சுற்றுலாத் தலங்களையும் அடையாளம் தெரியாமல் ஆக்கிவிடும் என்பதை நாம் அனைவரும் இன்றுதான் அறிந்து கொண்டுள்ளோம்...!

2004, டிசம்பர் 26ஆம் தேதி விடியல் பொழுது...! வழக்கம்போல மக்கள் அனைவரும் அவரவர் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை...! கடலோரப் பகுதியில் குடியிருக்கும் மக்களும், கடலுக்குச் சென்று தொழில் செய்வதையே தம் வாழ்வின் ஜீவாதாரமாகக் கொண்டிருந்த மீனவர்களும், அடுத்த சில நிமிடங்களில் இந்தக் கடல் அலைகளால் தங்கள் வாழ்க்கை நிலையே தலைகீழாய்ப் புரட்டப்பட உள்ளது என்பதை துளியும் அறிந்திருக்காத எதிர்பார்த்திராத அந்த வேளை...! உலகின் ஏதோ ஒரு பகுதியிலுள்ள சிறு சிறு தீவுகளை உள்ளடக்கிய இந்தோனேஷியா என்ற நாட்டின் சுமத்ரா என்ற பெயருடைய தீவு ஒன்றில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கத்தால் பெரும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுவிட்டது.

எப்போதும் தனது அழகிய அலை ஓசையால் மனித குலத்தைத் தாலாட்டிக் கொண்டிருந்த அந்த அலைகள், வழமைக்கு மாற்றமாக ஒரு பேரலையாக... சுனாமியாக உருவெடுத்து, நொடிப்பொழுதில் கரையில் வாழ்ந்து வந்த மக்களையும், அவர்களின் விலை மதிக்க முடியாத பொருட்களையும் வாரிச் சுருட்டிக்கொண்டு, எஞ்சியிருந்த மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிச் சென்றுவிட்டது... அந்தோ பரிதாபம்...!

வந்த பேரலை சுமத்ரா தீவோடு மட்டுமா நின்றது...? இல்லை... அதையும் தாண்டி இலங்கை, தாய்லாந்து, இந்தியாவின் அந்தமான் தீவு, தமிழ்நாடு, மாலத்தீவு உள்ளிட்ட பல நாடுகளின் லட்சக்கணக்கான மக்களின் கனவுகளை கண் மூடித் திறப்பதற்குள் தண்ணீரோடு கரைத்துச் சென்றுவிட்டது இப்பேரலை...!

இந்தப் பேரலையின் கோரத்தாண்டவத்துக்குப் பிறகு தப்பிப் பிழைத்த மக்களின் கதறல்களோ அலையின் தாக்குதல் அளித்த சேதத்தையும் மிஞ்சிவிட்டது...!

கண் இமை போல வளர்த்த என் செல்லக் குழந்தைகளை என் கண்ணெதிரிலேயே பறிகொடுத்துவிட்டேனே...!

நான் கட்டிய மனைவிய... நாம்பெத்த புள்ளைய நா பக்கத்துல இருந்தும் காப்பாத்த முடியலையே...!

என்னோடு இருந்தவங்களெப் பத்தி கொஞ்சமும் யோசிக்காமல் நான் மட்டும் தப்பிப் பொழச்சிட்டேனே...!

நகமும் சதையும் போல பழகுன என் தோழனோட சேர்ந்து தொழில் செஞ்சோமே... தனக்கு அழிவு காலம் வந்துடுச்சின்னு தெரிஞ்சிக்கிட்ட என் அன்புத் தோழன், நீயாவது தப்பிச்சிப் போயிடு! ஒங்குடும்பமாவது சந்தோசமா வாழட்டும்! ன்னு அந்த நேரத்திலும் எம்மேல அன்பு வச்சவாறே தன் வாழ்க்கையெ முடிச்சிக்கிட்டானே....!

இத்தன பேரும் போன பிறகு என்னெ மட்டும் ஏன் விட்டுவச்சே இறைவா...?

நாங்க என்ன பாவம் செஞ்சுட்டோம் இறைவா...?


எங்கு பார்த்தாலும் இதேமாதிரியான ஓலங்கள்தானே நம் காதுகளைத் தொட்டன? மனிதன் இவற்றை நிகழ்த்துவதாக இருந்தால், மொத்தத்தில் பல மாதங்களை எடுத்துக்கொள்ளும் அளவு வேலை (சேதம்) நொடிப்பொழுதில் நடந்து முடிந்துவிட்டதுதான் கொடுமையிலும் கொடுமை...!

பேரலையின் கோரத்தாண்டவத்தில் சிக்கிச் சிதறுண்ட மக்களின் உடல்கள் எங்கெங்கோ மூலைகளிலும், முட்புதர்களிலும் வீசப்பட்ட காட்சிகள்... இப்படி இறந்து கிடந்த சடலங்கள் ஒருபுறமிருக்க, எம்புருஷனக் காணோமே... எம்பையன் போனவன் திரும்பவே இல்லையே... எங்கப்பா கடைக்குப் போயிட்டு வர்றேன்னு சொல்ரிட்டுப் போனாரே... இன்னும் வரலையே... இதுபோன்ற ஓலங்கள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் இந்த நிமிடம் வரை இருந்த வண்ணமாகவே உள்ளன.

இவை போக, இந்தக் கோரக்காட்சிகளைக் கண்ணால் கண்டு விக்கித்துப் போன பல லட்சக்கணக்கான மக்கள் குறிப்பாக குழந்தைகள் மனநிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டு, இன்னும் ஒரு வருடத்துக்காவது அவர்களுக்கு மனமாற்றத்துக்கான பயிற்சிகள் கொடுப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆங்காங்கே மருத்துவ முகாம்கள், மனமாற்றத்துக்கான பயிற்சி முகாம்கள்... இப்படி தொடர்ச்சியாக காட்சிகள் நம் விழித்திரையைத் தொட்டுத் திரிகின்றன.

இவர்களுக்கேற்பட்ட பொருட்சேதத்தை ஓரளவுக்கு மனித இனம் ஈடுசெய்துவிடும் என்றாலும், இவர்களின் உயிர்ச்சேதத்துக்கு உலகமே சேர்ந்து ஆலோசித்தாலும் தீர்வளித்திட முடியுமா? முடியாதல்லவா...? பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆகக் கடைசியாக நம்மால் செய்ய முடிந்தது சற்று ஆறுதலான வார்த்தைகளைத் தருவதுதான்...! ஆம்... அதைத்தான் நம்மால் செய்திட இயலும். அண்டசராசரத்தைப் படைத்தாலும் ஏக இறைவன்தான் அவர்களின் உள்ளத்தில் ஊன்றிவிட்ட திடுக்கத்தையும், துக்க உணர்வுகளையும் நீக்கி உண்மையான ஆறுதலையும், நிம்மதியையும் தந்திட இயலும்.

மீட்புப் பணிகளும், நிவாரணப் பணிகளும் பல்வேறு கோணங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் அதே வேளையில், இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற பெருஞ்சேதங்கள் நிகழாமல் காத்திடவும், சேத அளவுகள் குறைக்கப்படவும், மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்டுள்ள இயற்கைப் பேரழிவுகளிரிருந்து மக்களைக் காப்பாற்றும் பொறுப்பிலுள்ள அறிஞர்களும், புவியியல் வல்லுணர்களும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது ஆறுதலான ஒரு விஷயம்.

இவ்வளவும் இருந்துவந்த போதிலும், இதுபோன்ற பேரழிவுகள் எப்போது ஏற்படும் என்பதைத் துள்ளியமாகக் கணித்திடவோ, ஏற்படவிருக்கும் பேரழிவைத் தடுத்திடவோ யாருக்கும் சக்தியில்லை என்பதை மேற்சொன்ன வல்லுணர்கள் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கின்றனர். சேத அளவைக் குறைக்கலாமே தவிர தவிர்க்க முடியாது என்பது அவர்களின் உறுதியான கூற்று.

பெரும் வேடிக்கை என்னவென்றால்... அனைவரும் ஒத்துக்கொண்டேயாக வேண்டிய இந்த உண்மைகளை மனித சமுதாயம் பேரளவுக்குத்தான் ஒத்துக்கொண்டுள்ளது. மனதளவில் இன்னும் இந்த மனித இனம் பாடம் படிக்கவில்லை. இந்த சுனாமி எனப்படும் ஆழிப்பேரலைச் சீற்றத்தைக் கண்ணால் கண்ட பின்னரும் இவர்களின் வாழ்க்கைப் போக்கில் சிறு மாறுதலையும் காண முடிவதில்லை... இன்னும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

வருடித் தாலாட்டும் இந்த அலைகடல் கூட நொடிப்பொழுதில் தம்மை வாரிச்சுருட்டிச் சென்றுவிடும் என்பதை மட்டும் ஏனோ மனிதன் கண்டும் காணாதது போல இருக்கின்றான்... அடுத்த வினாடி தன் வாழ்வு நீட்டிக்கப்படும் என்பதற்கு அவனிடத்தில் என்ன உத்தரவாதம் உள்ளது...?

இந்த மொத்த உலகமுமே சுகம் அனுபவிக்கத்தான்...! இதிலுள்ள படைப்புகள் அனைத்துமே இன்பத்தைப் பெருக்குவதற்குத்தான் என இந்த அற்ப உலகின் சொற்ப சுகத்தையே கதியென நம்பியிருக்கும் உண்மையை உணராத மக்கள்தான் இதுபோன்ற சுனாமிகளை சாத்தியமற்றது என்றும், நடக்கக் கூடாதது நடந்துவிட்டதாகவும், மனித சமூகம் எதிர்பார்த்திடாத ஒன்று நடந்துவிட்டதாகவும் அதிசயக் கருத்துக்களை அள்ளி வீசுகின்றனர்.

ஆனால்... இவ்வுலகின் படைப்புகளனைத்தும் மிகப்பெரும் சக்தியான ஒரே இறைவனின் கட்டுப்பாட்டுக்குள்தான் இயங்கி வருகின்றன என்பதையும், இப்பிரபஞ்சம் முழுவதும் ஒருநாள் தன் சக்தியை முற்றிலுமாக இழந்து அழிந்துவிடும் என்பதையும் பகுத்தறிவுள்ள ஒருவன் நிச்சயம் நம்புவான்! அத்தகைய ஒரு நாள்.......!

இந்த சுனாமி நிகழ்த்திட்ட பேரழிவைப் போன்றதல்ல! அதைவிட பல ஆயிரக்கணக்கான மடங்கு பயங்கரமான லி நினைத்தும் பார்த்திட இயலாத பாதிப்புகளையும், தீய விளைவுகளையும், பேரழிவுகளையும் ஏற்படுத்தும்...! அதுதான் உலகத்தின் முடிவுநாள்........! இந்த மகத்தான உண்மையை ஆழமாக மனதில் பதிய வைத்துக்கொண்ட ஒவ்வொரு உண்மையான இறைநம்பிக்கையாளக்கும், இந்த சுனாமி என்ன...? இதைவிடப் பன்மடங்கு பாதிப்புகளைத் தரவல்ல பேரழிவுகள் நிகழ்ந்திட்டால் கூட அவன் மனம் பாதிக்கப்படாது என்பது பகிரங்கமான உண்மை. உண்மையான இறை நம்பிக்கையாளனுக்கு இவை பாதிப்பை ஏற்படுத்தாது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அவ்வாறு மனம் பாதிக்கப்படும் எந்த ஒரு மனிதனும் உண்மையான இறை நம்பிக்கையாளன் அல்ல எனப்துவும் அந்த அளவுக்கு உண்மை...!

இவ்வுலக அழிவின்போது நடக்கவிருக்கும் பாதிப்புகளை தெளிவாக விளக்கும் திருக்குர்ஆனை ஆராய்ந்தறிந்துள்ள எத்தனையோ வல்லுனர்கள், வானம், பூமி மற்றும் அவற்றிலுள்ள பெரும் சக்தி வாய்ந்த படைப்புகள் அனைத்துமே திருக்குர்ஆனின் கூற்றுப்படி ஒருநாள் நிச்சயம் அழிக்கப்படும் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதை எவரும் ஆதாரத்துடன் மறுத்திட இயலாது.

இத்தனை எச்சரிக்கைகளுக்கும் ஓர் ஒத்திகையாக இந்த சுனாமியை மனிதன் கண்டுள்ள போதிலும், அதிரிருந்து பாடம் படிப்பதை விட்டுவிட்டு, இன்னும் இந்த உலக இன்பங்களில் மதிமயங்கி, பொருள் சேர்ப்பது மட்டுமே வாழ்வு என்று இருப்பானேயானால் அதைவிட மூடத்தனம் வேறு இருக்க முடியுமா என்ன...? இந்த சுனாமி பற்றி உலகப் பொதுமறை திருக்குர்ஆன் கூறும் அதிசய உண்மையைப் பாருங்களேன்...!

மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாக கடலிலும், தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவிவிட்டன... அதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்வதற்காக அவர்களின் தீய செயல்களில் சிலவற்றின் தண்டனையை அவர்கள் (இந்த உலகிலும்) சுவைக்கும்படி அவன் செய்ய வேண்டியதாயிற்று...! (திருக்குர்ஆன் அத்தியாயம் : 30, வசனம் : 41)

இவ்வளவு தாழ்வான உலகத்தில் வாழ்ந்துவரும் நமக்குள் ஏன் இத்தனை பகைகள், ஜாதி மதம் இனம் மொழி பகுதி வேறுபாடுகள்...? நமக்கெதற்கு அகம்பாவம், ஆணவம் எல்லாம்...? அனைத்தையும் விட்டொழித்துவிட்டு, இந்த நிமிடத்திரிருந்தவாது இறைவனின் வல்லமையை உணர்ந்து, அவனது எச்சரிக்கைகளை மனதில் ஏற்றி, இந்த அழியும் உலகத்துக்குப் பிறகு நிலையான மறுஉலகம் ஒன்று உள்ளது என்பதை இச்சிற்றேட்டைப் படிக்கும் மக்கள் உணர்ந்திட வேண்டும். இவ்வுலகில் நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல தீய செயலுக்கும் அங்கு நன்மையாகவோ, தண்டனையாகவோ கூலி வழங்கப்படவுள்ளது.... அது, இந்த உலகத்தில் மனிதன் கண்டுள்ள நீதி போல ஆளுக்கொரு நீதி, நாளுக்கொரு நீதியல்ல! அணுவளவும் குறைவற்ற நீதி என்பதை மனதிற்கொண்டு அதன் அடிப்படையில் நம் வாழ்வை அமைத்துக்கொள்ள நாம் தயாராக வேண்டும்...!

இவ்வுலக வாழ்வு வெறும் விளையாட்டும் வேடிக்கையுமேயன்றி வேறில்லை...! நிச்சயமாக மறுமை வீடே நிலையானது! (திருக்குர்ஆன் அத்தியாயம் : 29 வசனம் : 64) .

இவ்வளவு கேவலமான உலக வாழ்க்கையில் லயித்துவிடுவதா...? அல்லது நிலையான மறு உலகை நம்பி வாழ்வதா...? எது சரியாக இருக்கும்? மறு உலகம்தானே...? நம்மைப் படைத்த இறைவன் கூறும் அந்த மறு உலகம் உடனடியாக வந்திடுமா? அல்லது அது எப்போது வரும்? நாளைக்கா? அடுத்த மாதமா? பத்து வருடங்கள் கழித்தா...? எதையும் நாம் அறிந்திட முடியாது. அது பற்றிய முழு அறிவும், படைத்த இறைவனுக்கு மட்டுமே உள்ளது. என்றாலும், அந்நாள் நிகழும்போது பெரும் பேரழிவுகள் பல நிகழ உள்ளன... அப்பேரழிவு, இந்த மொத்த உலகத்தையும் அழித்துவிடும் பெரும் நிகழ்வாகும்! இன்று நிகழ்ந்துவிட்ட இந்த சுனாமி எனும் கடல் கொந்தளிப்பையும், நிலநடுக்கத்தையும் விட அந்த நாளில் ஏற்படவிருக்கும் கடல் கொந்தளிப்பும், நிலநடுக்கமும் அவை ஏற்படுத்தவிருக்கும் மொத்தப் பாதிப்பும் இந்த மனிதனின் சிறு அறிவால் சிந்தித்துக்கூட பார்த்திட இயலாத அளவுக்கு பயங்கரமானது என்பதை உலகப் பொதுமறை திருக்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது :

பூமி பெரும் அதிர்ச்சியாக அதிர்ச்சியடையும்போது...
இன்னும் பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும்போது...
அதற்கு என்ன நேர்ந்துவிட்டது என்று மனிதன் கேட்கும்போது...
அந்நாளில் அது தன் செய்திகளை அறிவிக்கும்! உம் இறைவன் அதற்கு இறைச்செய்தி மூலம் அறிவித்ததால்...!
(திருக்குர்ஆன் அத்தியாயம் 99, வசனம் : 1 முதல் 5 வரை)

மேலும் திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்...!
வானம் பிளந்துவிடும்போது...
நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது...
கடல்கள் பொங்கி ஒன்றால் ஒன்று அகற்றப்படும்போது....... (திருக்குர்ஆன் அத்தியாயம் 82, வசனம் : 1 முதல் 3 வரை)
பூமியில் நிலப்பரப்பிலும், நீர்ப்பரப்பிலும் ஏற்படும் பாதிப்புகளை மட்டும் காணுவதற்கே இம்மனிதனுக்கு சக்தியில்லை என்கிறபோது, அந்த இறுதிநாளின் பயங்கர நிகழ்வுகளை மிகுந்த பலம் பெற்ற ஒவ்வொரு படைப்பும் தன் சக்தியை இழந்துவிட்டால்......
அது விஷயமாக திருக்குர்ஆன் தரும் தெளிவான எச்சரிக்கைகளைப் பார்ப்போமா...?
சூரியன் சுருட்டப்படும்போது...
நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது...
மலைகள் பிளக்கப்படும்போது...
சூல் நிறைந்த ஒட்டகைகள் கவனிப்பாரற்று விடப்படும்போது...
காட்டு மிருகங்கள் மனிதர்களுடனும், மற்ற பிராணிகளுடனும் ஒன்று சேர்க்கப்படும்போது...
கடல்கள் தீ மூட்டப்படும்போது...
உயிர்கள் ஒன்றிணைக்கப்படும்போது...
(திருக்குர்ஆன் அத்தியாயம் : 81, வசனம் : 1 முதல் 7 வரை)

அந்நாளின் பேரதிர்ச்சியுடன் ஒப்பிடும்போது கடுகளவு பாதிப்பை மட்டுமே தந்துள்ள இந்த சீற்றங்களிலேயே பெற்றோர், குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என்றிருந்த யாரும் யாரைப்பற்றியும் எண்ணிப்பார்க்காமல் விரண்டோடுகின்றனரே...? அந்த நாளின் பெருநிகழ்வுகளைக் காணுகையில் இவர்கள் நிலை எப்படி இருக்கும்? சிந்திக்க முடிகிறதா...? ஆகவே, செவிடாக்கும் பேரொலி வரும்போது அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும், தாய் தந்தையை விட்டும், தன் மனைவி மக்களை விட்டும் விரண்டோடுவான்... அன்று ஒவ்வொருவருக்கும் அவரவர் நிலையே போதுமானதாக இருக்கும். அந்நாளில் சில முகங்கள் சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும். அந்நாளில் இன்னும் சில முகங்களின் மீது புழுதி படிந்திருக்கும். அவற்றை இருள் மூடியிருக்கும். அவர்கள்தான் (மறுவுலக வாழ்வை) நிராகரித்தவர்கள், தீயவர்கள். (திருக்குர்ஆன் அத்தியாயம் : 80, வசனம் 33 முதல் 42 வரை)

இன்றாவது இயற்கைச் சீற்றங்களிரிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் பாதிக்கப்படாத வேறு இடங்களைத் தேடி, ஆதரிக்கும் உள்ளங்களை நாடிச் சென்று விடுகின்றனர். ஆனால், அந்த யுக முடிவு நாளின் பேரழிவை இவ்வுலகில் வாழும் ஒவ்வோர் உயிரும் சந்தித்தே தீரும். அன்று பாதிக்கப்பட்டவர் பாதிக்கப்படாதவர், ஏழை பணக்காரர், உயர்ந்தவர் தாழ்ந்தவர், அரசன் ஆண்டி என்றெல்லாம் யாரையும் பிரித்துப் பார்த்திட இயலாத அளவுக்கு அனைத்து உயிர்களும், அனைத்துப் பொருட்களும் சர்வ நிச்சயமாக அந்நாளின் கோரப்பிடியிரிருந்து தப்பிக்க முடியாது. ஒவ்வோர் உயிரும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வழி தேடி அலையும். ஆனால், ஒரு வழியையும் காண முடியாது!

அனைத்தையும் படைத்த இறைவன் அன்று தன் படைப்பினங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து வைத்துக்கொண்டு, வானத்தைச் சுருட்டி தன் வலது கையில் வைத்துக்கொண்டு கூறுவான் : இன்று நானே அரசன்...! உங்களில் பெருமையடித்தோர், அடக்கி ஆண்டுகொண்டு இருந்தோரையெல்லாம் எங்கே....? என்று கேட்பான். மேலும், பூமியைச் சுருட்டி தன் இடது கையில் வைத்துக்கொண்டு அதே கேள்வியைக் கேட்பான். இவ்வாறு வானமும், பூமியும் சுருட்டப்பட்டு, அதிலுள்ள படைப்புகள் அனைத்தும் தூக்கி எறியப்படும் அந்த நாளில்தான் மனித இனம் தன் முடிவை தெளிவாக அறிந்துகொள்ளும்.

இன்று தன் கையில் இருப்பதே பெரிது என்று எண்ணிக்கொண்டு, பணத்தாலும், செல்வாக்காலும் எதையும் சாதித்து விடலாம்... யாரையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு, மற்றவர்களை அடிமைப்படுத்தி தன் வாழ்வை சுகபோகமாக நடத்திக்கொண்டிருப்போர் இவற்றையெல்லாம் சிறிதளவாவது சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அந்த நாளில் இந்தப் பணமோ, புகழோ நமக்கு சிறிதும் பலன் தரப்போவதில்லை என்ற எண்ணம் அவர்களின் மனதில் ஆழப் பதியும் வரை அவர்களின் இதுபோன்ற நடவடிக்கைகள் நிற்கப் போவதில்லை.

இந்த மனிதன் இவ்வுலகில் தன் மனம் போன போக்கில் வாழ்க்கையை நடத்திக்கொண்டு, தான் எது செய்தாலும் கேட்க ஆளில்லை என்ற இறுமாப்புடன் நடந்துகொண்டும், பிறருக்கும் தெரியாமல் எந்த மோசடியையும் செய்து இன்பத்தைக் காணலாம் என்று கனவு கண்டும் வருகின்றனர். இவர்களுக்கு இறைவன் திருக்குர்ஆன் மூலமாகச் சொல்வது என்ன தெரியுமா?

(உலகம் அழியும்) அந்த நாளில் மக்கள் தங்கள் செயல்களுக்குரிய பலனைக் காண்பதற்காக கூட்டம் கூட்டமாகப் புறப்பட்டுச் செல்வர். எவர் கடுகளவு நன்மை செய்தாலும் அதன் பலனைக் கண்டு கொள்வார். எவர் கடுகளவு தீமை செய்தாலும் அதன் பலனைக் கண்டு கொள்வார். (திருக்குர்ஆன் அத்தியாயம் : 99, வசனம் : 6 முதல் 8 வரை).

இவ்வுகிலுள்ள மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களில் மனிதன் எத்தனை ஓட்டைகளை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். எவ்வளவு பெரிய குற்றங்களை வேண்டுமானாலும் செய்துவிட்டு தப்பித்துவிடலாம். ஆனால் அந்த நாளில் இறைவனின் சட்டத்துக்குக் கட்டப்பட்டே ஆகவேண்டும்.

அந்த நாளில் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அநீதம் இழைக்கப்படாது. படைத்த இறைவனின் ஏடு, இவ்வுலகில் மனிதன் உள்ளத்தால் நினைக்கும் விசயங்களைக் கூட பதிவு செய்து வைத்திருக்கும். அப்போது இந்த மனிதன், (என் கையில் தரப்பட்டுள்ள) இந்தப் பதிவேடு நாம் செய்த சிறிய பெரிய தவறுகள் எதையும் விட்டு வைக்கவில்லையே... என்று புலம்புவானாம்...! ( திருக்குர்ஆன் அத்தியாயம் : 18, வசனம் 49 )

இவ்வுலகில் தான் செய்த எவ்வளவு பெரிய குற்றமானாலும், அவற்றிரிருந்து தப்பித்துக்கொள்ள எதையாவது லஞ்சமாகக் கொடுத்து சாதிக்கின்ற இந்த மனிதன் அந்த உலக முடிவு நாளின் நெருக்கடியான சூழ்நிலையிலும் தன்னைத் தற்காத்துக்கொள்ள எதையாவது லஞ்சமாகக் கொடுக்கத் துணிவானாம்... படைத்த இறைவன் திருக்குர்ஆனில் அதுபற்றிக் கூறுவதைப் பாருங்கள் :

அந்நாளில் ஒரு நண்பன் மற்றொரு நண்பனைப் பற்றி விசாரிக்க மாட்டான்! அவர்கள் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வார்கள்.. அந்நாளின் வேதனைக்கு ஈடாக குற்றவாளி தன் மக்களையும், தன் மனைவியையும், தன் சகோதரனையும், அவனை அரவணைத்துக் கொண்டிருந்த சுற்றத்தாரையும், பூமியிலுள்ள அனைவரையும் ஈடுகொடுத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளபிரியப்படுவான்... (திருக்குர்ஆன் அத்தியாயம் : 70, வசனம் : 10 முதல் 14 வரை).

ஆனால் எல்லாம்வல்ல இறைவனிடம் அந்நாளின் நெருக்கடிக்குப் பயந்து குற்றம் செய்த மனிதன் எந்த லஞ்சத்தையும் கொடுத்து சரிகட்டிவிட முடியாது! எந்த சாக்குப்போக்கும் சொல்ரித் தப்பித்திடவும் முடியாது! இறைவன் சொன்னால் சொன்னதுதான்! அவனது வாக்கு உறுதியானது! அவனது பிடி கடுமையானது. அவனது பிடிக்குள் சிக்குண்ட பிறகு ஒருவன் தப்பிக்கும் பேச்சுக்கே இடமில்லை. இதுபற்றி இறைவனே உலகப் பொதுமறையாம் திருக்குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள் :

எந்த ஒரு சொல்லும் என்னிடம் மாற்றப்படாது! நான் அடியார்களுக்கு அநியாயம் செய்பவனில்லை... (திருக்குர்ஆன் அத்தியாயம் : 50, வசனம் : 29)
(இன்னும்) உம்முடைய இறைவனின் பிடி மிகக் கடுமையானது... (திருக்குர்ஆன் அத்தியாயம் : 85, வசனம் : 12)

எனவே, பாசமுள்ள அன்பு நெஞ்சங்களே...! பகுத்தறிவைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களே...! இன்று நாம் கண்டுள்ள இந்த சுனாமி போன்ற பேரழிவுகள் எல்லாம் மேற்சொன்னது போல உலக முடிவு நாளின் நெருக்கடியான சூழ்நிலைகளை கண் முன் கொண்டு வரப்பட்ட எச்சரிக்கைதான்! எனவே, இது வரை நாம் செய்த தவறுகளுக்கு இறைவனிடம் மன்னிப்புக்கோரி, இனி சிறு தவறும் கூட செய்திடாத அளவுக்கு நம் வாழ்வை பக்குவமாக அமைத்துக் கொள்வோம்.... யுக முடிவு நாளில் நாம் செய்த நன்மைகளுக்கு மட்டும் கூரியாக சுவர்க்கத்தைப் பெறுமளவுக்கு நம்மை தயார்படுத்திக் கொள்வோம்... படைத்த இறைவன் அதற்காக நமக்கு அருள் செய்யட்டும்!

இறைவழி நடப்போம்...! நிறை சுகம் பெறுவோம்...! இனிய இஸ்லாம் உங்களை அன்புடன் அழைக்கிறது...!

எவர் அல்லாஹ்வையும் (இறைவனையும்) மறுமை நாளையும் நம்பி, நல்ல செயல்களைச் செய்கின்றனரோ அவர்களது கூரி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்கள் அச்சப்படவும் மாட்டார்கள், கவலைப்படவும் மாட்டார்கள்.நன்றி : சமூக நல்லிணக்க மையம் (CESH)

 

 

[பதிவேற்றிய நாள் : 26-03-2011]
  


 

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved