முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில

தமிழ் குர்ஆன் மென்பொருள்

   

Go To Index

ஆஷூரா நோன்பு ஏன் ஏதற்கு?

ஹபீபுல்லாஹ்


வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்.

'إن عدّة الشُهور عند الله اثنا عشر شَهراً في كتاب الله يوم خلق السماوات و الأرض ........ '

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - (அல்குர்ஆன் 9:36)

எனவே ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள் என்பது மனிதன் கண்டுபிடித்ததல்ல. இந்த உலகத்தை படைக்கும்போதே ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள் என்பதை அல்லாஹ் வரையறுத்து விட்டான் என மேற்கூறிய திருமறை வசனம் திட்டவட்டமாக தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் இஸ்லாமிய புதுவருடத்தின் முதல்மாதத்தில் (முஹர்ரம் 1432) நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த மாதத்தில்தான் ஆஷூரா என்றழைக்கப்படும் சிறப்பான நாள் ஒன்று உள்ளது. ஆம் அது முஹர்ரம் 10 வது நாளாகும். ஆனவக்காரன் பிர்ஆவ்னிடமிருந்து இறைத்தூதர் நபி மூஸா (அலை) அவர்களையும், அவர்களை பின்பற்றிய முஸ்லீம்களையும் அல்லாஹ் தன் வல்லமையால் காப்பாற்றிய நாள்தான் இந்த 10 வது நாள்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வருகை தந்தபோது அங்குள்ள யூதர்கள் இந்த 10 வது நாளில் நோன்பு வைத்திருப்பதைக் கண்டார்கள். இவ்வாறு நோன்பிருப்பதின் விசேஷம் என்ன என்பதை அறிய நபி (ஸல்) அவர்கள் யூதர்களைப் பார்த்து வினவினர். அதற்கு அந்த யூதர்களோ 'இன்றைய நாளில்தான் இறைவன் நபி மூஸா (அலை) அவர்களை பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றி, பிர்அவ்னையும் அவனுடைய கூட்டத்ததாரையும் கடலில் முழ்கடிக்கச் செய்தான் என்றும், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நபி மூஸா (அலை) அன்று நோன்பிருந்தார்கள். எனவே நாங்களும் நோன்பிருக்கிறோம் என்றும் விடை பகர்ந்தார்கள்'.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், நபி மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் (முஸ்லிம்களாகிய)நாங்கள் தான் உங்களைவிட தகுதியானவர்கள் என்று கூறி அந்த நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் அனைவரையும் நோன்பு நோற்குமாறும் கூறினார்கள். (இந்த சம்பவம் நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களால் அறிவிக்கப்பட்டு ஸஹீஹூல் புஹாரி, மற்றும் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.)

மேலும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக, ஆஷூரா நாளுக்கு முந்தைய நாளான முஹர்ரம் 9 அன்றும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும், 'இனிவரும் காலங்களில் நான் உயிரோடிந்தால் முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகய இரு தினங்கள் நான் நோன்பு வைப்பேன்' என்றும் நபி (ஸல்) அவர்கள் அறிவித்தனர்.(நூல் : புஹாரி, முஸ்லிம்) இருப்பினும் அவர்கள் அதே வருடத்தில் மரணமடைந்தனர்.

எனவே முஹர்ரம் 9,10 ஆகிய தினங்களில் நாம் நோன்பு வைப்பது சுன்னத்தாகும். இதை உறுதி படுத்துவதாக கீழ்க்காணும் நபிமொழி அமைந்துள்ளது.

ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப்பின் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும்.(அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரழி), நூல் : புஹாரி, முஸ்லிம்)

இந்த வருடத்தில் நோன்பு வைப்பதால் சென்ற வருடத்தின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. பாவங்கள் மன்னிக்கப்படுவதினால் மனிதன் சுத்தமாகிறான். பாவங்களற்ற மனிதன்தான் அல்லாஹ்வின் கிருபையால் சுவர்க்கம் செல்லமுடியும். இதைவிட பெரிய பலன் என்ன இருக்கிறது? எனவே சுன்னத்தான இந்த நோன்பை நோற்று, நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு சுவனம் அடைய முயல்வோமாக!

 

 

 

 

[பதிவேற்றிய நாள் : 10-12-2010]
  


 

 


 


 

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved