முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில

தமிழ் குர்ஆன் மென்பொருள்

   

Go To Index

தொழுகை - தொடர் 2

ஒளூவின் (தூய்மையின்) அவசியம்

ஒளூ ஏன்? எதற்கு? எப்படி?

தூய்மை ஈமானில் பாதி நிலையாகும். தூய்மை அற்றவனின் தொழுகை இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாது. திருக்குர்ஆனில் அல்லாஹ் சுப்ஹானஹுதஆலா இவ்வாறு குறிப்பிட்டுள்ளான்:

முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்;. உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்;. உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்;. தவிர நீங்கள நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்;. அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்;. அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான். (அல்குர்ஆன் - 5:6).

தூய்மை ஈமானில் பாதி நிலையாகும்

தூய்மை அற்றவனின் தொழுகை இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாது

தூய்மை (ஓளூ) நீங்கிவிட்டால் மீண்டும் ஒளூச் செய்யாமல் தொழுவது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாது

என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் (நூல்கள் : முஸ்லிம் திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத்).

இவ்வாறு ஒளூவை பற்றி நிறைய ஹதீஸ்கள் காணக்கிடைக்கன்றன. சுமார் 200 மேற்பட்ட ஹதீஸ் குறிப்புகள் புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா மற்றும் அபூதாவூது போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் இடம்பெற்றுள்ளன. இத்;தூய்மை பற்றி அனேக ஹதீஸ்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான செய்திகளை தாங்கியவைகளாகவே உள்ளன. மேலும் ஒளூ பற்றிய அதிக விபரங்கள் தேவைபடுவோர் மேற்கண்ட ஹதீஸ்கள் மற்றும் புலூஹுல் மராம் தொகுப்பிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

உளூவை முறிக்கக் (நீக்கக்) கூடியவைகள்:

சிறுநீர் மற்றும் மலம் கழித்தால் உளூ நீங்கிவிடும்.
நபி (ஸல்) அவர்கள், மலஜலம் கழிக்கவும் தமது தேவைகளுக்காவும் வெளியே சென்றார்கள், பின்னர் உளூ செய்து கொண்டார்கள். அறிவிப்பாளர்: முகீரா பின் ஷுஅபா (ரலி). நூல் - இப்னு மாஜா.

காற்றுப்பிரிதல்:
காற்றுப் பிரிவது உளூவை முறிக்கும். உங்களில் யாருக்காவது 'ஹதஸ்' ஏற்பட்டால் அவர் மீண்டும் உளூச்செய்யாதவரை அவரின் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) சொன்னபோது, ஹதரல்மவ்த்தை சேர்ந்த ஒருவர் அபூஹுரைராவே 'ஹதஸ்' என்பதன் பொருள் என்ன? என்றார், அதற்கு அபூஹுரைரா (ரலி) சப்தத்துடனோ அல்லது சப்தமின்றியோ காற்றுப்பிரிதல் (மலவாய் வழியாக) என்று பதில் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹம்மாம் இப்னு முனப்பஹ். நூல்கள் - புகாரீ, முஸ்லிம் மற்றும் அஹ்மத்.

ஒரு மனிதர் 'நான் ஆட்டிறைச்சி உண்டதற்காக உளூச் செய்ய வேண்டுமா?' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், 'நீ விரும்பினால்' என்று பதிலளித்தார்கள். மேலும் அம்மனிதர்; 'நான் ஒட்டகத்தின் இறைச்சி உண்டதற்காக உளூச் செய்ய வேண்டுமா?' என்று மீண்டும் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி) நூல்- முஸ்லிம்.

'எவர் மைய்யித் (பிரேதத்)தைக் குளிப்பாட்டுகிறாரோ அவர் குளிக்கட்டும். எவர் அதைத் தூக்குகிறாரோ அவர் உளூச் செய்து கொள்ளட்டும்;' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். நூல்கள் - அஹ்மத், நஸாயீ மற்றும் திர்மிதீ. இது 'ஹஸன்' எனும் தரத்தில் திர்மிதீயில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக எந்த ஹதீஸும் 'ஸஹீஹ்' எனும் தரத்தை அடையவில்லை என அஹ்மதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உறக்கம் (தூக்கம்): உளூ நீங்குமா?

உட்கார்ந்து உறங்குதல்:
1-நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களின் தோழர்கள் இஷாத் தொழுகைக்காகக் நபி (ஸல்) வருகைக்காக காத்திருப்பார்கள். அப்போது (தூக்கத்தின் காரணமாக) அவர்களுடைய தலைகள் கீழ் நோக்கி கவிழ்ந்திருக்கும். பிறகு அவர்கள் தொழுகைக்கான அழைப்பு வந்ததும் (மீண்டும்) உளூச் செய்யாமல் அப்படியே தொழுவார்கள் அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) நூல்கள் - அபூதாவூத், திர்மிதீ; மற்றும் தாரகுத்னீயில் 'ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முஸ்லிமில் உள்ளது.

நின்ற நிலையில் உறங்குதல்:
2-இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் ஒரு நாள் இரவு எனது சிறிய தாயாரான மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் தங்கினேன், அப்போது நபி (ஸல்) அவர்கள் தொழுவதற்காக எழுந்து தொழுதார்கள். நானும் அவர்களுடன் தொழுவதற்காக அவர்களின் இடப்புறத்தில் நின்று கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் என் கையை பிடித்து தனது வலப்புறத்தில் நிறுத்தினார்கள். நான் தொழுகையில் (லேசாக) தூங்கிவிடும் நேரம் அப்போது எனது காதை பிடித்து விழிக்கும்படி செய்வார்கள். நூல்: முஸ்லிம்.
உட்கார்ந்தோ அல்லது நின்றுகொண்டோ உறங்கினால் உளூ நீங்குவதில்லை, மாறாக படுத்து உறங்கினால் உளூ நீங்கும். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி). நூல் - பைஹகீ.

ஆகவே மேலே குறிப்பிட்டுள்ள ஹதீஸ் விளக்கம் அம்மாதிரி உறக்கம் உளூவை நீக்காது என விளங்கலாம். சிலருக்கு ஆழ்ந்த உறக்கம் ஏற்படும், இது உளூவை முறிக்குமென அறிவிப்புகள் வந்துள்ளன.

3-மேலும், அனஸ் (ரலி) அவர்கள் மற்றுமொரு அறிவிப்பில்: நபித்தோழர்கள் அவ்வாறு தூங்கும் சமயம் குறட்டை விட்டதை கேட்டுள்ளதாக திர்மிதீயில் பதியப்பிடப்பட்டுள்ளது..

இந்த உறக்கத்தில் வித்தியாசம் இருப்பதை உணரலாம். முதல் இரு ஹதீஸ்கள் படி உளூ நீங்காது எனவும் மூன்றாவது ஹதீஸ்படி உளூ நீங்கும் என அறியலாம். காரணம் இப்படி உறங்கும் நேரங்களில் ஆழ்ந்த நித்திரையாகி விடும் பட்சத்தில் 'காற்று வெளியாவதற்கு' சந்தர்ப்பம் உள்ளது. அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பும் ஆதாரமாக உள்ளது.

தொழுகையை முறிப்பவைகள்:
'உங்களில் ஒருவர் தொழுகையில் இருக்கும் போது அவரிடம் (ஷைத்தான்) வந்து அவருடைய ஆசனப் பகுதியில் ஊதுகிறான். எனவே அவர் தனக்கு உளூ (முறியாத நிலையிலும்) முறிந்து விட்டதாக எண்ணுகிறார். இவ்வாறு (உங்களில் எவருக்கேனும்) நிகழ்ந்தாலும், அவர் சத்தத்தைக் கேட்காத, அல்லது வாடையை உணராத வரையில் (தொழுகையை விட்டு) திரும்ப வேண்டாம்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்.

இது அப்துல்லாஹ் இப்னு ஜைத் (ரலி) வாயிலாக புகாரீ மற்றும் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸ் போன்றே அபூஹுரைரா (ரலி) வாயிலாக முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது.

வேறு ஒரு அறிவிப்பில் ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்து 'தொழுது கொண்டிருக்கையில் காற்று பிரிவது போன்ற உள்ளுணர்வை' ஏற்படுத்துவது பற்றி வினவியிருக்கிறார், அதற்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், காற்றுப் பிரிவது போன்ற சப்தம் மற்றும் அதன் வாடையை (நாற்றத்தை) உணராதவரை தொழுகையை விட்டு விட வேண்டாம். அறிவிப்பாளர் : உப்பாத் இப்னு தமீம் (ரலி) நூல்கள் - இப்னுமாஜா, நஸாயீ, அஹ்மத் மற்றும் புகாரீ.

'உங்களில் எவரேனும் தன்னுடைய வயிற்றில் ஏதேனும் (சத்தம்) கேட்டு (காற்று) ஏதும் வெளியேறிதா, இல்லையா? எனும் சந்தேகம் எழுந்தால், அச்சத்தத்தைக் கேட்காத வரை அல்லது காற்றை (வெளியேறியதாக) உணராத (நாற்றம்) வரையில் (தொழுகையை முறித்து) பள்ளிவாசலை விட்டு வெளியே செல்ல வேண்டாம்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம்

மர்மஸ்தானத்தை (பிறப்புறுப்பை) தொடுதல்:
1-ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்: 'நான் எனது மர்ம உறுப்பைத் தொட்டு விட்டேன்' என்றோ அல்லது, 'தொழுகையில் ஒருவர் தனது மர்ம உறுப்பைத் தொட்டுவிட்டால் அவர் உளூச் செய்ய வேண்டுமா?' என்று கேட்டதற்கு, அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'வேண்டியதில்லை நிச்சயமாக அது உன்னுடைய (உடலின் ஒரு சதைத் துண்டுதான் -பகுதி) ஒரு உறுப்புகளில் ஒன்று என்று கூறினார்கள் என தல்க் இப்னு அலி (ரலி) அறிவிக்கிறார்கள்.

2- 'எவர் தனது மர்ம உறுப்பைத் தொட்டு விடுகிறாரோ அவர் உளூச் செய்யாமல் தொழவேண்டாம்' (உளூ செய்து தொழுது கொள்ளட்டும்) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: புஸ்ரா பின்த் ஸஃப்வான் (ரலி).நூல்கள்-தப்ரானி மற்றும் தாரகுத்னி.
மேலே குறிப்பிள்ள அந்த இரு ஹதீஸ்கள், அஹ்மத், அபூதாவூத், நஸாயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா. இது திர்மிதீ மற்றும் இப்னு ஹிப்பானில் 'ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு: மேற்கூறப்பட்டுள்ள இரு ஹதீஸ்கள், இரு முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளது. அவ்விரண்டும் நிராகரிக்க முடியாத 'ஸஹீஹ்' தரத்திலும், ஆதாரபூர்வமான ஹதீஸாகவும் உள்ளது. இதனை இணைத்து நாம் ஒரு முடிவு செய்யவேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் கூறியதிலிருந்து 'அதுவும் உமது உறுப்புதானே' என்றதன் கருத்து, ஒருவர் தனது பிறப்புறுப்பை (மர்மஸ்தானத்தை) தற்செயலாக தொட்டாலோ அல்லது அவைகளின் தனித்தன்மையை அறியாது தொட்டாலோ உளூ நீங்காது. பிறப்புறுப்பின் தனித்தன்மையை அறிந்து ஒரு நோக்கத்துடன் (இச்;சையுடன்) தொடுவாராயின் உளூ நீங்கும் என முடிவு செய்யவேண்டும்.
இப்படியும் விளங்கலாம், முதல் ஹதீஸ் நோக்கமின்றி (இச்சையின்றி) மற்ற உறுப்புக்களை தொடுவது போல் தொடுவதால் உளூ நீங்காது எனவும், இரண்டாவது ஹதீஸ் இச்சையுடன் (நோக்கத்துடன்) அதனை தொடுவதால் உளூ நீங்கி விடுகிறது மீண்டும் தொழுகைக்காக உளூ செய்தல் அவசியமாகின்றது. இப்படி எடுத்துக்கொண்டால் முரண்பாடின்றி விளங்கிக்கொள்ளலாம். (அல்லாஹ் மிக்க அறிந்தவன்).

ளயீப் - என்னும் (Weak) ஹதீஸ்கள்:

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்:

1-நபி(ஸல்) அவர்கள் தம் மனைவியரில் ஒருவரை முத்தமிட்டு விட்டுப் பின் தொழுகைக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் (மறுபடியும்) உளூச் செய்யவில்லை. நூல் - அஹ்மத். இது புகாரீயில் ளயீஃப் எனும் தரத்தில் புதிய செய்யப்பட்டுள்ளது.

2-உங்களில் எவருக்கேனும் (தொழுகையில்) வாந்தி அல்லது மூக்கில் இரத்தம் அல்லது வாயில் (வயிற்றின் உணவு) மேலாடும் உணர்வு ஏற்பட்டால், அல்லது காமநீர் வெளிப்பட்டால் அவர் திரும்பச் சென்று உளூச் செய்து கொள்ளட்டும்; இதற்கிடையில் அவர் (யாருடனும் எதுவும்) பேசாமலிருந்தால், பின்னர் அவர் தன் தொழுகையை (அப்படியே) தொடரட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் - இப்னு மாஜா. இது அஹ்மதில் ளயீஃப்எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபி(ஸல்) அவர்கள், இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டார்கள் பின் (மீண்டும்) உளூச் செய்யாமல் தொழுதார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். நூல் - தாரகுத்னீ. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலவாய்க்கு முடிச்சு கண்ணாகும். கண்கள் இரண்டும் தூங்கி விட்டால், முடிச்சு அவிழ்ந்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என முஆவியா (ரலி) அறிவிக்கிறார்கள். நூல்கள் - அஹ்மத், தப்ரானீ. இந்த ஹதீஸில் அதிகப்படியாக, 'தூங்கி விட்டவர் செய்த உளூ முறிந்து விடும். ஆகவே அவர் மீண்டும் உளூ செய்து கொள்ளட்டும்' எனும் வாசகம் முஆவியா (ரலி) வாயிலாகவே அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. அலி (ரலி) வாயிலாகவும் இவ்வாறே பதிவாகியள்ளது. மேற்கண்ட இரண்டு அறிவிப்பும் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

'எவர் படுத்துத் தூங்கி விடுகிறாரோ, அவர் மீதே உளூ கடமையாகும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். நூல் - அபூதாவூத். இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அபூதாவூத் முன்கர் என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்களில் எவரிடமேனும் ஷைத்தான் வந்து (சந்தேகத்தைக் கிளப்பி), 'உனக்கு உளூ முறிந்து விட்டது' என்று கூறினால், நீ பொய் சொல்லிவிட்டாய்' என்று அவர் கூறட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் (ரலி) அறிவிக்கிறார். நூல் - ஹாகிம். மேலும் இப்னு ஹிப்பானில் 'அவர் தன்னுடைய மனதினுள் கூறிக் கொள்ளட்டும்' எனும் வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது.



 

தொடரும் இன்ஷா அல்லாஹ்....

[பதிவேற்றிய நாள் : 27-07-2010]
 



 


 

 


 


 

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved