முதல் பக்கம்

திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கட்டுரைகள்

வரலாறு

கேள்வி பதில

தமிழ் குர்ஆன் மென்பொருள்

   

Go To Index

இஸ்லாமியப் பார்வையில் ஸல்... அலை... ரலி... ரஹ்...

நபித்தோழர்களை (ரலி) என்றும், மற்றும் அவர்களின் காலத்திற்குப்பின் வாழ்ந்ததோரை (ரஹ்) என்றும், மற்ற நபிமார்களைக்கூறும்போது (அலை) என்றும் கூறுவது வழமையில் உள்ளது. அவர்களுக்காக பிரார்த்தளை செய்யும் வகையில் அமைந்த வார்த்தையாகும்.

ரலியல்லாஹுஅன்ஹு என்பதைச் சுருக்கியே 'ரலி' என்று எழுதப்படுகிறது. இதை முழுழவார்த்தையாகவே படிக்கும்போது கூறிக்கொள்ளவேண்டும். இதன் பொருள் 'அவர் மீது அல்லாஹ்வின் கருணை ஏற்படட்டுமாக' என்பதாகும்.

'ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' என்பதைச் சுருக்கியே 'ஸல்' என்று எழுதப்படுகிறது. இதையும் வாசிக்குபோது முழுவார்த்தையுமே கூறவேண்டும். நபி அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக என்பதே இதன் பொருளாகும்.

'அலைஹிஸ்ஸலாம் அல்லது அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்தைச்சுருக்கியே 'அலை' என்று எழுதப்படுகிறது. இதையும் வாசிக்கும்போது முழு வார்த்தையுமேயே கூறவேண்டும். 'அல்லாஹ் அவர் மீது சாந்தியை வழங்குவானாக' என்பது இதன் பொருளாகும்.

நபி (ஸல்) அவர்களை நினைவில் கொள்ளும் போது அவர்களுக்காக இறைவனிடம் ஸலவாத்து கூறவேண்டும் அதாவது, அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதே இறை கட்டளை, நபி வழியும் கூட.

நிச்சயமாக அல்லாஹ், இந்த நபிக்கு அருள் புரிகிறான். அவனது வானவர்களும் அவருக்கு அருள்புரிய வேண்டுகிறார்கள். இறைவிசுவாசிகளே அவர் மீது அருள் புரியவும், சாந்திபுரியவும் வேண்டுங்கள். (அல்குர்ஆன் - 33:56).

கஹ்பு இப்னு உஜ்ரா (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து உமக்கு அன்பளிப்பு ஒன்று வழங்கட்டுமா? என்று கேட்டார்கள். (தொடர்ந்து பின் வருமாறு) கூறினார்கள்.

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு எப்படி ஸலாம் கூறுவது என்பதை அறிவோம். உங்கள் மீது எப்படி ஸலவாத் கூறுவது என்று கேட்டோம். 'அல்லாஹும்மஸல்லி அலாமுஹம்மதின் கமாஸல்லய்த்த அலா இப்றாஹீம, வஅலா ஆலீ இப்றாஹீம, இன்னக்க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரீக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்றாஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத்.' என்று கூறுங்கள் என்று நபி (ஸல்) பதில் கூறினார்கள். அறிவிப்பாளார்: அப்துர் ரஹ்மான் இப்னு அபீலைலா நூல்-புகாரி 6357.

மற்றொரு ஹதீஸில் என் மீது ஒரு தடவை ஸலவாத் கூறினால், அல்லாஹ் உங்கள் மீது பத்துத் தடவை சலவாத் கூறுகிறான் (மன்னிக்கிறான், அருள் புரிகிறான்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாவும் உள்ளது.

எனவே, நபி (ஸல்) அவர்களின் பெயரைக் கூறும்போது-அவர்களை நினைவு கூறும்போது ஸலவாத் கூற வேண்டும். அதனால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் கூறிட வேண்டும். எழுத்துச் சுருக்கத்திற்காக இதை (ஸல்) என்று சுருக்கி எழுதப்படுகிறது.

இது போலவே நல்ல காரியங்கள் செய்த, செய்து கொண்டிருக்கின்ற நல்லவர்கள் அனைவரையும் அருள் புரிய வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்யலாம். இப்படி பிரார்த்தனை செய்திட அல்லாஹ்வும் அனுமதிக்கின்றான். நபி (ஸல்) அவர்களும் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

(நபியே) அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை (ஜகாத்தை) எடுப்பீராக!. அதனால் அவர்களை நீர் சுத்தப்படுத்தி, அவர்களின் அகங்களை தூய்மையாக்கி வைப்பீராக! மேலும், அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! நிச்சயமாக உமது பிரார்த்தனை அவர்களுக்கு நிம்மதி அளிப்பதாகும். மேலும், அல்லாஹ் செவியேற்கிறவன் மிக்க அறிகிறவன் (அல்குர்ஆன் 9:103).

நபி (ஸல்) அவர்களிடம் எவரேனும் தன் ஜகாத்தை கொண்டு வந்தால் நபி (ஸல்) அவர்கள் அவருக்காக 'அல்லாஹுமஸல்லி அலைஹி (இவருக்கு இறைவா! அருள் புரிவாயாக!) என்று பிரார்த்திக் கூறுவார்கள். என் தந்தை தன் ஜகாத்தை கொண்டு போனபோது 'அல்லாஹும்ம ஸல்லி அலா ஆலிஅவ்ஃபா' (இறைவா! அபூ அவ்ஃபா குடும்பத்தாருக்கு அருள் புரிவாயாக) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அபீ அவ்ஃபா (ரலி) நூல்-புகாரி 6359.

பள்ளிவாசலில் ஒரு மனிதர் குர்ஆன் ஓதிக்கொண்டிருப்பதை செவியுற்ற நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! (ரஹிமஹுல்லாஹு) குர்ஆனின் அத்தியாயத்தில் இன்ன இன்ன வசனங்களை நான் மறந்திருந்ததை அவர் எனக்கு நினைவூட்டிவிட்டார் எனக்கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல் புகாரி 6335.

நல்லது செய்கின்ற, நமக்கு உதவி புரிகின்ற ஒருவருக்கு பிரார்த்தனை செய்வது நபிவழி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் தான் இறைப்பணியில் ஈடுபட்ட நபிமார்கள், நபித்தோழர்கள், நல்லவர்கள் என அனைவரையும் நாம் நினைவில் கொள்ளும் போதெல்லாம் துஆச் செய்கிறோம்.

இந்த துஆவின் வார்த்தைகளை கூறும்போது நபிமார்களுக்கு 'அலை' என்று கூறுகிறோம். அவர்களிடமிருந்து தனித்துக் காண்பிக்க நபி (ஸல்) அவர்களை 'ஸல்' என்று கூறுகிறோம். இதுபோலவே நபித்தோழர்களை கூறும்போது 'ரலி' என்கிறோம். அவர்ளுக்கு அடுத்து வந்த நல்லவர்களை 'ரஹ்' என்று கூறுகிறோம். இன்னார்-இன்னார் என பிரித்து அறிந்து கொள்ள வழமையாக்கிக் கொண்ட வார்த்தைகள் தானே தவிர, இன்னாருக்கு இந்த வார்த்தைகளைத் தான் கட்டாயம் கூற வேண்டும் என்பதில்லை.

9:103 வசனத்தில் ஜகாத் தரும் நபருக்கு 'பிரார்த்தனை செய்வீராக!' என்ற வார்த்தைக்கு ஸலவாத் என்பதையே அல்லாஹ் கூறுகிறான். இதுபோலவே ஜகாத்தை செலுத்திய அபூஅவ்ஃபா (ரலி) என்ற நபித்தோழருக்கு பிரார்த்திக்கும் போது 'அல்லாஹும்ம ஸல்லி (இறைவா அருள் புரிவாயாக) என்று நபி (ஸல்) அவர்கள் கூறி பிரார்த்தித்துள்ளார்கள். புகாரின் 6335வது ஹதீஸின் தன் தோழர் பள்ளிவாசலில் குர்ஆன் ஓதுவதைக் கேட்டு 'ரலி' என்று கூறாமல் 'ரஹ்' என்று கூறுகிறார்கள். இது போலவே 6331வது ஹதீஸின் கவிஞர் ஆமிர் எனும் தன் தோழருக்கு 'ரலி' என்று கூறி பிரார்த்திக்காமல் 'ரஹி' என்ற வார்த்தையால் பிரார்த்திக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் போரில் கிடைத்தப் பொருட்களை ஒரு முறை பங்கீட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'அல்லாஹ் மீது சத்தியமாக! இதன் மூலம் அல்லாஹ்வின் திருப்தியை முஹம்மத் பின்பற்றவில்லை' என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அதைக் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் முகம் மாறியது '(நபி) மூஸாவுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! அவர் இதை விட அதிகமாக நோவினை செய்யப்பட்டார். ஆனால் பொறுமை காத்தார்' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) புகாரி-6059.

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் மூஸா (அலை) அவர்கள் கூறும்போது 'அலை' என்று கூறி பிரார்த்தனை செய்யாமல் 'ரஹ்' என்ற வார்த்தைகளால் பிரார்த்தனை செய்கின்றார்கள்.

ஆக, இன்னாரைக் கூறும்போது இப்படித்தான் கூறி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது நாமாக உருவாக்கிக்கொண்ட மரபுச் சொற்கள் தானே தவிர, கட்டாயம் அல்ல! ஆனால், பிரார்த்திப்பது என்பது நபிவழி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

'நிச்சயமாக இறை நம்பிக்கை கொண்டு, நற்செயல்களில் ஈடுபடுகின்ற இவர்கள்தான் படைப்புகளில் சிறந்தவர்கள். அவர்களுடைய (நற்) கூலி அவர்களின் இரட்சகனிடம் (அத்னு எனும்) நிலையான சுவனங்களாகும். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், என்றென்றும் (அவர்கள்) அவற்றில் நிரந்தரமாக (த்தங்கி) இருப்பவர்கள். அல்லாஹ்வும் அவர்களைப் பொருந்திக்கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக்கொண்டார்கள், அது எவர் தன் இரட்சகனுக்குப் பயப்படுகிறாரோ, அவருக்குரியதாகும். (அல்குர்ஆன் 98:7-8).

'அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொண்டான்' என்ற தமிழாக்கத்தின் அரபிச் சொல்லாக 'ரலியல்லாஹுஅன்ஹு' இடம் பெறுகிறது. நாம் நபித்தோழர்களின் பெயர்களை கூறும் போது கூறும் வார்த்தையை, பொதுவாக எல்லா நல்ல அடியார்களையும் இணைத்துக் கூறுகிறான் அல்லாஹ்.

இன்றைக்கும் உள்ள நல்லவர்களைக் கூறும்போது (ரலி) என்றோ, (ரஹ்) என்றோ, (அலை) என்றோ, (ஸல்) என்றோ கூறலாம். இப்படிக் கூறலாம் என்றாலும் அதைக் கூறுவதால் சமுதாயத்தில் நபி, நபித்தோழர்கள், அதற்கும்பிந்திய காலத்தவர்கள் யார் என்ற குழப்ப நிலை ஏற்படும்.

இந்த வழமையும், மரபும் நாமாக ஏற்படுத்திவிட்டவையாக இருந்தாலும், இன்னாருக்கு இன்ன வார்த்தை என்று கூறும் இந்த மரபிற்கு தடை இல்லை என்பதாலும், மக்களிடையே குழப்ப நிலை ஏற்படக்கூடாது என்பதாலும் நபி (ஸல்) அவர்களை கூறும் போது 'ஸல்' என்றும் மற்ற நபிமார்களை கூறும்போது 'அலை' என்றும், நபித்தோழர்களை கூறும்போது 'ரலி' என்றும், மற்ற இமாம்களை கூறும்போது 'ரஹ்' என்றும் கூறலாம்.

நன்றி: பிலால் மாத இதழ் (நவம்பர் 2007)

தமிழ் அச்சு: அபு அல் முஹன்னத்

 

 

 

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
  
   Miscellaneous

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved