Free Quran Software

Harun Yahya

Understand Islam

Quran Miracles

Islam & Terrorism

Why did we choose Islam?

Others

  திருக்குர்ஆன்

நபிமொழிகள்

கேள்வி பதில்

கட்டுரைகள்

ஆய்வுகள்

வரலாறு

 தமிழ் குர்ஆன்

 
 

ஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும்

அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும்.

பாகம் : 1

விமர்சனம் : அமாவாசை (Conjunction என்னும் சங்கம நிகழ்வு) உலக நேரம் 16 மணிக்கு மேல் நடைபெறும் போது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற கிழக்கத்திய நாடுகளில் உள்ளோர் அமாவாசை (சங்கமம்) நடைபெறும் முன்பாகவே அடுத்த நாளின் காலைப் பொழுதை அடைந்து விடுகின்றனர். அமாவாசை (சங்கம) தினத்திற்கு அடுத்தநாள் மாதத்தின் முதல் நாள் என்று பிரச்சாரம் செய்யும் ஹிஜ்ரி கமிட்டியினராகிய நீங்கள், மேற்படி கிழக்கத்திய நாடுகளிலுள்ளோரையும் அமாவாசை (சங்கமம்) நடைபெறுவதற்கு முன்னரே புதிய மாதத்தைத் துவங்கச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? அவர்கள் எப்படி முதல் நோன்பை பிடிக்க இயலும்? அத்தகைய கிழக்கத்திய நாடுகளிலுள்ளவர்களுக்கு அமாவாசை (சங்கமம்) நடைபெறாமல் விடிந்து விடுவதால் விடிந்த அந்த நாளை விட்டுவிட்டு அடுத்த நாளை ரமழான் முதல் நாளாகக் கொள்ள வேண்டும் என்று கூறுவதுதானே அறிவார்ந்த செயலாக இருக்கும்? என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர்.

விளக்கம் : Coordinated Universal Time (UTC) – அதாவது ஒருங்கிணைக்கப்பட்ட பன்னாட்டு நேரம் சுருக்கமாக உலக நேரம் (UT) என்று அழைக்கப்படுகிறது. மேற்படி விமர்சனத்தின் சுருக்கமாவது : அமாவாசை என்று பிற மக்கள் புரிந்துள்ள புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நிகழ்வு வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவில் நடைபெறுகிறது என்றால், அதற்கு சில மணித்துளிகள் முன்னரே கிழக்குப் பகுதியிலுள்ள நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு சனிக்கிழமையாக விடிந்து விடுகிறது. இந்நிலையில் ஹிஜ்ரி நாட்காட்டியின் அடிப்படையில் அந்த நியூசிலாந்து மக்கள் சங்கமம் நடைபெறும் முன்பே நோன்பு நோற்க வேண்டுமா? என்பதே இக்கேள்வியின் மையக் கருத்தாகும்.

 

நம் இஸ்லாமிய மார்க்கம் பிறைகளின் அத்தாட்சிகள் பற்றி கூறுவதென்ன? என்பதைத் தெளிவாக விளங்கிட வேண்டும் என்ற உளத்தூய்மையோடு கேட்கப்பட்ட கேள்வியாக மேற்படி கேள்வியை நாம் எடுத்துக் கொள்வோம்.

எனினும் ஹிஜ்ரி நாட்காட்டி தவறானது என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் சிலர் மேற்கண்ட கேள்வியை நம்மிடம் நேரடியாகக் கேட்டு தெளிவைப் பெற முயலாமல் ஹிஜ்ரி நாட்காட்டி தவறானது என்று பரப்பி வருகிறார்கள். அவர்களுக்கு அல்லாஹ் நேர்வழியைக் காட்டுவானாக.

(Geocentric Conjunction) புவிமைய சங்கமம் நிகழ்ந்ததை அறிந்தபின் நோன்பு வையுங்கள், சங்கமம் நிகழ்ந்ததை அறிந்தபின் நோன்பை விடுங்கள். உங்களுக்கு சங்கமம் நிகழும் முன் அடுத்த நாள் விடிந்து விட்டால், அந்த நாளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள் என்று அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களோ நமக்குக் கட்டளை இட்டிருந்தால் மேற்படி கேள்வியில் ஒரு அர்த்தம் இருக்கும்.

ஆனால் அல்லாஹ்வோ அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களோ மாதத்தைத் துவங்கவும், ரமழானின் முதல் நோன்பை நோற்கவும் சங்கமம் நடைபெறும் நேரம்வரை காத்திருங்கள் என்று கட்டளையிட வில்லை. பிறைகளின் படித்தரங்களை கவனிக்குமாறும், அப்பிறைகளை அடிப்படையாக வைத்தே நமது நாட்காட்டியின் தேதிகள் அமைக்கப்பட வேண்டும் என்றே குர்ஆனும் சுன்னாவும் வலியுறுத்துகிறது.

பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்? நீர் கூறும் அவை மக்களின் தேதிகளுக்காகவும், இன்னும் ஹஜ்ஜுக்காகவும் உள்ளன. அல்குர்ஆன் (2:189)

உலர்ந்த வளைந்த பழைய பேரீத்தப் பாளையை போல் திரும்பிவரும் வரை சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம். அல்குர்ஆன் (36:39)

அல்லாஹ் பிறையின் படித்தரங்களை மனித சமுதாயத்திற்கு தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு பிடியுங்கள். அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை விடுங்கள். எனவே அவை உங்கள் மீது மறைக்கப்படும்போது முப்பதாக கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அறிவித்தவர் இப்னு உமர் (ரழி), நூல்: முஸன்னஃப் அப்துர்ரஸாக்.

அல்லாஹ் நிச்சயமாக பிறைகளை தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவற்றை நீங்கள் கவனிப்பதைக் கொண்டு நீங்கள் நோன்பு வையுங்கள். மேலும் அவற்றை நீங்கள் கவனிப்பதைக் கொண்டு நிறைவு செய்யுங்கள். எனவே அவை உங்கள் மீது மறைக்கப்படும்போது கணக்கிட்டுக் கொள்ளுங்கள். மேலும், நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் மாதம் என்பது முப்பதை விட அதிகமாவதில்லை. அறிவித்தவர் : இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹ் இப்னு ஹூசைமா.

புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நிகழ்வு நடைபெறும் நாளைத்தான் புவிமைய சங்கம நாள் என்று நாம் அழைக்கிறோம். இதற்கு 'அமாவாசை நாள்' என்ற சொல்லை நாம் ஏன் பயன் படுத்துவதில்லை? என்று சிலர் கேட்கின்றனர். மேலும் அமாவாசை என்பது ஒரு சிறு நிகழ்வுதானே அதை ஏன் முழுநாளாகக் கருதுகிறீர்கள்? என்றும் வினா எழுப்புகின்றனர்.

பிற மதத்தவர்கள் தங்களின் மத வழிபாடுகளை குறிப்பிட்ட அந்த அமாவாசை தினத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட (அதாவது இரண்டு நாட்கள்கூட) அமாவாசை தினங்களாகக் கருதி நடைமுறைப் படுத்துகின்றனர். ஆனால் நாம் குறிப்பிடும் இந்த புவிமைய சங்கமம் என்பது சந்திர மாதத்தின் இறுதி நாளான 'தனித்த ஒருநாளில்' – 'ஒரு கிழமையில்' -'ஒரு தேதியில்' மட்டுமே நடைபெறும் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை. புவிமைய சங்கம நாள் என்பது முழுமையான ஒருநாள் மட்டுமே. ஒன்றுக்கு மேற்பட்ட நாட்கள் அல்ல. அந்த நாளைக் குறிப்பிட்டுதான் 'ஃப இன் கும்ம அலைக்கும்' - உங்களுக்குப் பிறை மறைக்கப்படும் போது என்று நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பும் செய்துள்ளார்கள்.

மேலும் சூரியன்-சந்திரன்-பூமி ஆகிய முக்கோள்களும் சங்கமிக்கும் இந்த சங்கம நிகழ்வு என்பது பூமியில் ஏதேனும் ஒரு மையப் புள்ளியில் அந்த நாளுக்குள் ஒருசில நொடிப் பொழுதுகள் நடைபெறும் நிகழ்வே.

இந்நிகழ்வு உலக மணி நேரத்தில் (UT யில்) குறிப்பிடப்படுவது இந்நிகழ்வு நடைபெறும் இடத்தைக் குறிக்கும். அதாவது புவிமைய சங்கமம் உலக நேரம் 7:00 மணியில் (7:00 UT யில்) நிகழ்கிறது என்றால் அது உலகத் தேதிக் கோட்டிலிருந்து வலது புறமிருந்து இடதுபுறமாக அமைந்துள்ள 7:00 வது மணியில் நடைபெறுகிறது என்று பொருள். ஏழாவது மணிப் பகுதியில் அமைந்துள்ள இந்தியாவின் பகுதியை அது குறிக்கும். இவ்வாறு உலக நேரம் என்ற சொல் நம் பூமியிலுள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியை குறிப்பதற்காகவே பயன் படுத்தப்படுகின்றது.

அதுபோல உலகநேரம் 9 மணியில் (9 UT யில்) புவிமைய சங்கமம் நடைபெறும் என்றால், உலகத் தேதிக் கோட்டிலிருந்து 9 மணி தூர அளவிலுள்ள சவுதி அரேபியா இருக்கும் பகுதியைக் குறிக்கிறது. மேலும் புவிமைய சங்கமம் எந்த நாட்டில், எந்தப் பகுதியில் நடந்தாலும் அந்தப் பகுதியின் அப்போதைய நேரம் நண்பகலாகவே இருக்கும்.

சங்கம நிகழ்வை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

1.சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய முக்கோள்களும் தத்தமது நீள்வட்டப் பாதையில் சூழன்று வரும்போது ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளில் அவை மூன்றும் ஒரு தளத்தில் (Same Plane) சங்கமிக்கும். அவ்வாறு சங்கமிக்கும் நிகழ்வைத்தான் புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) என்கிறோம்.இது சாதாரண சங்கம நிகழ்வாகும்.

2.அதுபோல சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய முக்கோள்களும் தத்தமது நீள்வட்டப் பாதையில் சூழன்று வரும் போது, சில குறிப்பிட்ட மாதங்களில் இறுதிநாளில் மட்டும் அவை மூன்றும் ஒரு தளத்திலும் (Same Plane) , ஒரே நேர்கோட்டிலும் (Straight Line) சங்கமிக்கும். அப்படி அம்மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரியனின் வெளிச்சம் சந்திரனால் பூமிக்கு மறைக்கப்படும். அன்றைய சங்கம தினத்தில் (Geocentric Conjunction with Solar Eclipse) சூரியக் கிரகணகமும் ஏற்படும்.

இச்சங்கம நிகழ்வு நடைபெறும் மாதத்தின் இறுதிநாளை ஒரு முழுநாளாகத்தான் கொள்ள வேண்டும். அப்படித்தான் உலக மக்கள் அனைவரும் புரிந்து ஏற்றுள்ளோம். இருப்பினும் இந்த சங்கம நாள் என்னும் கும்மவுடைய தினம் என்பது முழுநாள் அல்ல என்று யாரும் கருதினால் அவர்கள் சற்று நிதானமாக நமது விளக்கத்தை புரிந்து கொள்ள முயலவேண்டும்.

உதாரணமாக ஜூம்ஆ தொழுகை என்பது வெள்ளிக்கிழமை அன்று ஒரு சில மணித்துளிகளில் நாம் தொழும் தொழுகையாகும். இருப்பினும் 24 மணி நேரங்கள் கொண்ட அந்த முழு நாளையும் ஜூம்ஆ தினம் என்றே நாம் அழைக்கிறோம். ஜூம்ஆ தொழுகை ஏற்படுவது போன்று புவிமைய சங்கமம் நிகழ்வு அந்த நாளில் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் ஏற்படுவதில்லை, பூமியில் ஒரு பகுதியில் மட்டுமே ஏற்படும். எனினும் ஒரு முழுமையான நாளில் ஒரு பகுதியில் மட்டுமே சங்கமம் நடைபெற்றாலும் அந்த முழு நாளும் சங்கமநாள்தான் என்பதைப் புரிந்து கொள்வதற்காக இப்படி விளக்குகிறோம்.

புவிமைய சங்கம நாள் என்பது 24 மணி நேரங்கள் கொண்ட முழுமையான தனித்த ஒரு நாளைத்தான் குறிக்கும் என்பதால் அதைப் பிற மதத்தவர்கள் போல அமாவாசை நாள் என்று அழைக்காமல் புவிமைய சங்கம நாள் என்றே நாம் அழைக்கிறோம்.

இன்னும் மேற்கண்ட விமர்சனத்தில் கேட்கப்பட்டுள்ளதைப் போல உலக நேரம் 16 மணிக்குப் பிறகு அத்தகைய புவிமைய சங்கமம் நடைபெற்று, கிழக்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்கு சங்கமம் நடைபெறும் முன்னரே மறுநாள் விடிந்து விட்டால், விடிந்த அந்த நாளை விட்டுவிட்டு அடுத்த நாளை, புதிய மாதத்தின் முதல் நாளாகக் கொள்ள வேண்டும் என்பதற்கு குர்ஆனிலோ, ஸஹீஹான ஹதீஸ்களிலோ எந்த ஆதாரங்களும் இல்லை. மேற்கண்ட இக்கருத்து மார்க்க அடிப்படை மட்டுமின்றி அறிவியல் அடிப்படையிலும்கூட மிகவும் தவறானதாகும். நாட்காட்டியைப் பற்றி இந்த ஆய்வின் பிற்பகுதியில் இடம்பெற்றுள்ள விளக்கங்களை அறிந்து கொண்டால் இதுபோன்ற வாதங்கள் அனைத்திற்கும் விடை கிடைத்து விடும் - இன்ஷா அல்லாஹ்.

கிழக்கத்திய நாடுகளில் உள்ளவர்கள் விடிந்த அந்த நாளை விட்டுவிட்டு அடுத்த நாளை புதிய மாதத்தின் முதல் நாளாகக் கொள்ள வேண்டும் என்பது மிகவும் தவறான வாதமேயாகும். இதைப் புரிந்து கொள்வதற்கு உதாரணமாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற கிழக்கத்திய நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் ரமழான் 30-வது நோன்பை நோற்று முடித்து விட்டார்கள் என்று கொள்வோம். ரமழான் இறுதி நாளுக்கு அடுத்த நாள் ஷவ்வால் முதல் நாள் நோன்புப் பெருநாள் என்பதும், 31-வது நோன்பு என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லை என்பதும் அனைவரும் அறிந்த விஷயம்.

இந்நிலையில் அந்த ரமழான் 30-வது நாளில் புவிமைய சங்கமம் என்ற நிகழ்வு உலக நேரம் 16 மணிக்கு மேல் நிகழும் பட்சத்தில் சங்கமம் நிகழ்வதற்கு முன்னரே மேற்படி நாட்டிலுள்ளோர் அடுத்தநாள் காலை நேரத்தில் நுழைந்திருப்பார்கள். மேற்படி விமர்சனத்தின் கருத்துப்படி மேற்படி நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற கிழக்கத்திய நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் ரமழான் மாதத்தில் மேலும் ஒரு நாளைக் கூட்ட வேண்டும். இப்படி ஒருநாளை அதிகப்படியாகக் கூட்டினால் அவர்களுக்கு அம்மாதத்திற்கு 31 நாட்கள் வரும். சங்கமமே இன்னும் நடைபெறவில்லை என்ற நிலையில், புறக்கண்களால் பிறையை பார்க்க முடியாது என்பதும் உறுதி. அதனால் மேற்படி விமர்சனத்தின் கருத்துப்படி புதிய மாதத்தை ஆரம்பிக்காது மாதத்தில் ஒரு நாளை அதிகப்படியாக கூட்டத்தான் முடியும். எனவே நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற கிழக்கத்திய நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் ஒருநாளை அதிகப்படுத்தி 31-வது நோன்பை நோற்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போகிறது.

இதுபோல துல்காயிதா மாதத்தின் 30-வது தினத்தில் இதுபோன்று உலக நேரம் 16 மணிக்குப் பின்னர் சங்கமம் நடைபெற்று, அடுத்தநாளை விட்டுவிட்டால் அல்லது ஒரு நாளை அதிகப்படியாக துல்காயிதா மாதத்தில் கூட்டினால், துல்ஹஜ் மாதத்தின் அரஃபா நாளும், ஹஜ்ஜின் கடமைகளை நிறைவேற்ற வேண்டிய நாட்களும் தவறாக ஆகிவிடும்.

இன்னும் ஷஃபான் மாதத்தின் 30-வது தினத்தில் இதுபோன்று உலக நேரம் 16 மணிக்கு பின்னர் சங்கமம் நடைபெற்று, அடுத்த நாளை விட்டுவிட்டால் அல்லது ஒரு நாளை அதிகப்படியாக அந்த ஷஃபான் மாதத்தில் கூட்டினால், அடுத்து வரும் ரமழான் மாதத்தின் முதல் நாள் முதல் நோன்பை உலக முஸ்லிம்களில் ஒருசாரார் இழக்க நேரிடும். இவ்வாறு ஒரு மாதத்தின் நாட்களை முன்பின்னாக ஆக்குவதால் ஏற்படும் தவறுகளுக்கும், இழப்புகளுக்கும் மேற்படி விமர்சனத்தை செய்பவர்கள்தான் மார்க்க ரீதியான நியாயமான தீர்வை எடுத்துக் காட்ட வேண்டும். எனவே கிழக்கத்திய நாடுகளில் உள்ளவர்கள் விடிந்த அந்த நாளை விட்டுவிட்டு அடுத்த நாளை புதிய மாதத்தின் முதல் நாளாகக் கொள்ள வேண்டும் என்பது மிகவும் அடிப்படையற்ற, விபரீதமான வாதமேயாகும்.

சந்திர மாதத்தின் முப்பதாவது நாள் புவிமைய சங்கமம் உலக நேரம் 16 மணிக்குப் பின் நடைபெறும் ஹிஜ்ரி வருடங்கள், அதன் மாதங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்காக, உதாரணத்திற்காக 10 மாதங்களின் சங்கம நிகழ்வின் குறிப்புகளை கீழே தந்துள்ளோம்.

ஹிஜ்ரி ஆண்டு 1440 - ஜமாதில் ஆகிர் மாதம் 30-வது நாள் புதன்கிழமை உலக நேரம் 16.04 மணி
ஹிஜ்ரி ஆண்டு 1460 - ஸஃபர் மாதம் 30-வது நாள் ஞாயிற்றுக்கிழமை உலக நேரம் 16.43 மணி
ஹிஜ்ரி ஆண்டு 1467 - ரபியுல் ஆகிர் மாதம் 30-வது நாள் சனிக்கிழமை உலக நேரம் 17.15 மணி
ஹிஜ்ரி ஆண்டு 1468 - ரபியுல் ஆகிர் மாதம் 30-வது நாள் புதன்கிழமை உலக நேரம் 18.16 மணி
ஹிஜ்ரி ஆண்டு 1475 - ஜமாஅதில் ஆகிர் மாதம் 30-வது நாள் செவ்வாய்க்கிழமை உலக நேரம் 16.32 மணி
ஹிஜ்ரி ஆண்டு 1476 - ஜமாஅதில் ஆகிர் மாதம் 30-வது நாள் சனிக்கிழமை உலக நேரம் 18.14 மணி
ஹிஜ்ரி ஆண்டு 1477 - ஜமாஅதில் ஆகிர் மாதம் 30-வது நாள் புதன்கிழமை உலக நேரம் 17.39 மணி
ஹிஜ்ரி ஆண்டு 1478 - ஷவ்வால் மாதம் 30-வது நாள் ஞாயிற்றுக்கிழமை உலக நேரம் 16.06 மணி
ஹிஜ்ரி ஆண்டு 1484 - ஷஃபான் மாதம் 30-வது நாள் செவ்வாய்க்கிழமை உலக நேரம் 17.53 மணி
ஹிஜ்ரி ஆண்டு 1485 - ஷஃபான் மாதம் 30-வது நாள் சனிக்கிழமை உலக நேரம் 16.57 மணி


மேலும் அந்த கிழக்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்கு புவிமைய சங்கமம் நடைபெறும் முன்பாகவே விடிந்து விடுவதால், விடிந்த அந்த நாளை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு அடுத்த நாளை ரமழான் முதல் நாளாகக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை மேற்படி விமர்சனத்தில் காண்கிறோம். மார்க்க ஆதாரமும், அறிவியல் ஆய்வும் அற்ற ஞானமில்லாத நிலையைத்தான் மேற்படி விமர்சனத்தின் கருத்துக்கள் நமக்கு உணர்த்துகின்றன.

அல்லாஹ் தன் திருமறையில் கீழ்க்கண்டவாறு கூறுகின்றான்:-
மாற்றுவது நிராகரிப்பையே அதிகப்படுத்துகிறது. இதன்முலம் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப்படுகின்றனர். அவர்கள் அதை ஒரு வருடத்தில் அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கின்றனர்.அல்லாஹ் தடுத்திருக்கும் எண்ணிக்கையை சரிசெய்வதற்காக மேலும் ஒரு வருடத்தில் அதைத் தடுத்துக் கொள்கின்றனர். எனவே, அல்லாஹ் எதை தடுத்தானோ (அதை) அவர்கள் ஆகுமாக்கிக் கொண்டார்கள். அவர்களின் தீச்செயல்கள் அவர்களுக்கே அழகாக்கப்பட்டுவிட்டன. மேலும் அல்லாஹ், நிராகரிப்பவர்களை நேர் வழியில் செலுத்த மாட்டான். அல்குர்ஆன் (9:37)

அல்லாஹ் நமக்கு அருளிய சந்திர நாட்காட்டியை நபி(ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்தில் இருந்து எண்ணி கணக்கிட்டு வரும் நம்மை விமர்சிக்கும் முகமாக கூறப்படும் தீர்வு மனித சமுதாயத்தை எங்கே கொண்டு போய் சேர்க்கிறது என்பதை மேற்கண்ட வசனம் தெளிவுபடுத்துவதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேற்படி விமர்சனத்தின் கருத்தை மீண்டும் நினைவுபடுத்துகிறோம். அதாவது, உலக நேரம் 16 மணிக்கு மேல் (அதாவது அமெரிக்கப் பகுதியில்) புவிமைய சங்கமம் நடைபெற்றால் உலகின் 24 மணி நேரங்கள் கொண்ட ஒரு நாளின் 16 மணிநேரம் என்ற அளவுக்குள் வசிக்கும் மக்களுக்கு புவிமைய சங்கமம் நடைபெற்ற பிறகு முறையாக புதிய நாள் விடிகின்றது. அதாவது சற்றொப்ப சவுதி அரேபியாவிலிருந்து துவங்கி அமெரிக்காவுக்கும் மேற்கேயுள்ள அமெரிக்க சமோவா பகுதிவரையுள்ள மக்களுக்கு புவிமைய சங்கமம் நடைபெற்ற பிறகு முறையாக புதிய நாள் விடிகின்றது.

ஆனால் உலகத் தேதிக்கோட்டிற்கு அருகே அதன் மேற்குத் திசையில் வசிக்கும் 8 மணிநேர பகுதியில் வசிக்கும் மக்கள் சங்கமம் நடைபெறுவதற்கு முன்பாகவே புதிய நாளில் நுழைந்து விடும் வாய்ப்புகள் உள்ளது. அதாவது உலகத் தேதிக் கோட்டின் மேற்கே ஃபிஜியிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் வரையுள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள் சங்கமம் நடைபெறுவதற்கு முன்பாகவே புதிய நாளில் நுழைந்து விடும் வாய்ப்புகள் உள்ளது. இதுவே மேற்படி விமர்சனத்தின் மையக் கருத்தாகும்.

16 UT என்ன, புவிமைய சங்கமம் அந்த நாளின் 18 வது மணிநேரத்தில் நடந்தாலும் ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பெரும்பகுதி கிழக்காசிய நாடுகள் எவுதும் அடுத்தநாளுக்குள் செல்வதில்லை என்பதை இரவு பகலை விளக்கும் கீழுள்ள படத்தில் காணலாம்.

அவ்வளவு ஏன்? சங்கமம் 23.58 வது மணிநேரத்தில் நடைபெற்றாலும் சீனாவின் பெரும்பான்மை பகுதிகள், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற கிழக்காசிய நாடுகள் புதிய நாளைக்குள் சென்று விடுவதில்லை. எனவே உலக நேரம் 23.58 வது மணிநேரத்தில் புவிமைய சங்கமம் நடைபெற்றால்கூட கிழக்குத் திசையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் வரையுள்ள நாடுகள் அனைத்தும் அவ்வாறு விடிந்து அடுத்த நாளுக்குள் செல்வதில்லை என்பதை விமர்சனம் செய்வோர் தெரிந்திட வேண்டும். இந்த உண்மையை கீழுள்ள படத்தில் காணலாம்.


மேலும் புவிமைய சங்கமம் நடைபெறும் முன்பாகவே விடிந்துவிட்ட அந்த நாளை கணக்கிடாமலும், கண்டு கொள்ளாமலும் விட்டுவிட்டு அடுத்த நாளை முதல் நாளாகக் கொள்ள வேண்டும்
என்று மேற்படி விமர்சனம் கூறுகிறது. அவ்வாறு வேண்டுமென்றே விட்டுவிட்டுச் சென்ற அந்த நாளை எந்த மாதத்தில் கொண்டு சேர்ப்பது? ரமழானிலா, அல்லது ஷவ்வாலிலா? அப்படி சேர்ப்பதாக இருந்தால் எந்த அடிப்படையில் அந்த நாளைக் குறிப்பிட்ட அந்த மாதத்தில் சேர்ப்பது? இக்கேள்விகளை மேற்படி விமர்சனத்தை தெரிவிப்போர் சற்று சிந்திக் வேண்டுகிறோம்.

சரி உலக நேரம் 16 மணிக்கு மேல் புவிமைய சங்கமம் நடைபெற்ற பிறகு காலைப் பொழுதை அடைந்த விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில கிழக்கத்திய நாடுகளைத் தவிர்த்து, புவிமைய சங்கமம் நடைபெற்ற பின்னர் காலைப் பொழுதை அடையும் ஏனைய உலக நாடுகளிலுள்ள கோடானு கோடி முஸ்லிம்களுக்கு என்ன தீர்வு? அவர்களும் அந்த நாளை கண்டு கொள்ளாமல், கணக்கிடாமல் ஒரு மாய நாளாக விட்டுவிட வேண்டுமா? அல்லது புதிய மாதத்தை அந்த காலை பொழுதில் துவங்கிவிட வேண்டுமா? இதுபற்றி சற்று சிந்திப்பதும் மேற்படி விமர்சனம் செய்தவர்களின் கடமையாகும்.

கிழக்குத் திசையின் ஆரம்ப எல்லையான உலகத் தேதிக் கோட்டிலிருந்து மேற்கு நோக்கி மிக அதிக பட்சமாக 8 மணிநேர அளவுள்ள பகுதியில் வாழும் மக்களை மட்டும் மாதத்தில் ஒரு நாளைக் கூட்டிக் கொள்ளுங்கள் என்பதற்கு மார்க்க ஆதாரம் எங்கே உள்ளது?

அதுபோல உலகநேரம் 8-வது மணிநேரத்தில் இருக்கும் ஐக்கிய அரபு அமீரகப் பகுதியிலிருந்து (UAE) துவங்கி மேற்கு நோக்கிய மீதம் உள்ள 16 மணிநேர அளவுள்ள உலகநாடுகளில் வாழ்கின்ற மக்களுக்கு அவ்வாறு ஒரு நாளைக் கூட்டக் கூடாது என்று சொன்னால் அதற்குக் காரணம் என்ன? உலக நேரம் 23.58 வது மணிநேரத்தில் புவிமைய சங்கமம் நடைபெற்றால்கூட கிழக்குத் திசையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் வரையுள்ள நாடுகள் அனைத்தும் அவ்வாறு விடிந்து அடுத்த நாளுக்குள் செல்வதில்லை என்பதை முன்னர் விளக்கியுள்ளோம்.

ஒரு தேதிக்குள் இருக்கின்ற இருவேறு நாட்டு மக்களுக்கு இரண்டு வெவ்வேறு கிழமைகளைக் கூறுவது சரியானதுதானா? அல்லது (Geocentric Conjunction) புவிமைய சங்கமதினம் என்பது இருவேறு கிழமைகளில், இரண்டு தேதிகளில் நிகழும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கத்தான் முடியுமா?

ஒவ்வொரு மாதமும் நடைபெறுகின்ற புவிமைய சங்கமத்தின் போதும், உலகத் தேதிக் கோட்டிற்கு அருகில் அதன் மேற்குப் பகுதியில் உள்ள நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளோர் புவிமைய சங்கமம் நடைபெறும் முன்பாகவே அடுத்த நாளின் காலைப் பொழுதை அடைந்து விடுகின்றனரா? அல்லது ஒவ்வொரு மாதமும் சங்கமம் என்ற நிகழ்வு உலக நேரம் 16 மணிக்கு மேல்தான் நிகழ்கிறதா?

அரிதான விஷயங்களை பொதுவான மார்க்க சட்ட விதிக்குள் கொண்டுவர இயலாது என்ற அடிப்படையை விளங்காத சிலர் நம்மை பொய்ப்பிக்க வேண்டும் என்பதற்காகவே மக்களை இவ்வாறு தவறான வழியின்பால் இட்டுச் செல்கிறார்கள். அப்படிப்பட்ட தவறான சிந்தனையிலுள்ள அவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு மாதமும் நிகழும் சங்கமதினத்திற்கும் இவர்களின் விதிமுறை பொருந்துமா? என்று கேட்கிறோம். அப்படி இல்லை என்பதை அவர்களும் ஒப்புக் கொள்கிறார்கள்.

மாதம் 29 நாட்களைக் கொண்டதாகவும், 30 நாட்களைக் கொண்டதாகவும் இருக்கும் என்ற நபி (ஸல்) அவர்களின் போதனையைத் தவறாக விளங்கி, இந்த புவிமைய சங்கம சம்பவத்தை வைத்துக் கொண்டு உலக முஸ்லிம்களில் ஒரு பகுதியினருக்கு மாதம் 29-ஆகவும், பிறிதொரு பகுதியினருக்கு 30 நாட்களாகவும் அமைக்கலாம் என்ற அடிப்படையில், புதிய முறையற்ற நாட்காட்டியை அமைத்து குழப்பிவிட வேண்டும் என்ற நிலைக்கு நம்மை விமர்சிப்போர் வந்து விட்டார்களா?

அல்லது 30-வது நாள் மஃரிபு நேரத்தில் மறையும் பிறையை புறக்கண்ணால் பார்த்து அமல் செய்ய எந்த ஆதாரமும் இல்லை என்பதை அறிந்து தற்போது சந்திர நாட்காட்டியின் கணக்கை ஏற்று செயல்படுவதற்காக இது போன்ற விமர்சனங்கள் எழுப்பப்படுகிறதா? யாமறியோம்.

சந்திரனின் படித்தரங்களை வைத்து துல்லியமாகக் கணக்கீடு செய்யப்பட்டுள்ள ஹிஜ்ரி நாட்காட்டியின் கணக்கீட்டு முறையை அவர்கள் அறிந்தால் மேற்படி சந்தேகங்கள் தீர்ந்துவிடும் இன்ஷா அல்லாஹ். உண்மையிலேயே சத்தியத்தை அறிய இது போன்ற கேள்விகளை எழுப்புபவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட நாமும் பிரார்த்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

உலகத் தேதிக்கோட்டின் அருகே வசிக்கும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற கிழக்கத்திய நாடுகள், உலக நேரம் 16 மணிக்கு மேல் புவிமைய சங்கமம் நடைபெற்றால், புவிமைய சங்கமம் நடைபெறும் முன்பாகவே அந்நாடுகளிலுள்ளோர் அடுத்த நாளின் காலைப் பொழுதை அடைவது என்பது சந்திர சுழற்சியில் சில மாதங்களில் மட்டும் நடைபெறும் நிகழ்வாகும். இதை ஒரு சாதாரண விஷயம் என்று அலட்சியப்படுத்திட இயலாது. காரணம் நபி(ஸல்) அவர்களுக்கு நாம் சாட்சியாகவும், நமக்கு நபி(ஸல்) அவர்கள் சாட்சியாகவும் இருப்பதற்காக வல்ல அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள விதியாகும் என்பதை இக்கட்டுரையின் பிற்பகுதியில் புரிந்து கொள்வீர்கள்.

இன்னும் துருவப் பிரதேசங்களான ஆர்டிக் பகுதிகளில் 6 மாதங்கள் வரை இருள் சூழாது பகல் பொழுது நிலைத்திருக்கும். சில மாதங்களுக்கு சூரிய உதயமே நடைபெறாமலும் இருக்கும். சில நாட்களில் சந்திரனின் காட்சியைத் தொடர்ந்து கவனிக்க முடியாத நிலையும் ஏற்படும். இந்நிலையில் அங்கே வாழுகின்ற முஸ்லிம்கள் தங்கள் வணக்க வழிபாடுகளை சூரியன் மற்றும் சந்திரனின், உதித்தல் மறைதல் என்பதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அவற்றைக் கணக்கிட்டே அமல் செய்ய வேண்டும். இதற்கு நபி (ஸல்) அவர்களின் நேரடி வழிகாட்டுதல் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

அதாவது தஜ்ஜால் வரும் இறுதி காலத்தில் ஒரு நாள் என்பது ஒரு வருடத்தைப் போல இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் தெரிவித்தார்கள். அப்போது அந்த நாளில் நாங்கள் எவ்வாறு எங்கள் அமல்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று ஸஹாபாக்கள் வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'கணக்கிட்டுக் கொள்ளுங்கள்' என்று கட்டளையிட்டதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறோம்.

ஒரு நாள் என்பது ஒரு வருடம் போல் இருக்கும் அச்சமயத்தில் அந்த ஒரு வருடத்திற்குள் வரும் பன்னிரெண்டு சந்திர மாதங்களையும் நாம் கணக்கிட்டே துவக்க வேண்டும் என்பதையும், அந்த ஒரு வருடத்திற்குள் வரும் ரமழான், ஹஜ் போன்ற மாதங்களையும் நாம் கணக்கிட்டே துவங்கி வணக்க வழிபாடுகளைச் செய்ய வேண்டும் என்பதையும் யாரும் மறுக்கவே முடியாது.

இன்னும் உலகத் தேதிக்கோட்டிற்கு அருகே அதன் மேற்குப் பகுதியில் வசிக்கும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற கிழக்கத்திய நாடுகளிலுள்ளோர் புவிமைய சங்கமம் நடைபெறும் முன்பாகவே அடுத்த நாளின் காலைப் பொழுதை அடைந்து விட்டால் அவர்களுக்குத் தீர்வு என்ன என்பதை புரிந்து கொள்வது பல்கலைக் கழகங்களில் பட்டப் படிப்பு படித்து பாண்டியத்துவம் பெறவேண்டிய அளவுக்குள்ள விஷயமல்ல. இஸ்லாம் என்பது அனைவரும் எளிமையாக விளங்கி செயல்பட முடிந்த வகையிலேயே அல்லாஹ் அமைத்துக் கொடுத்த உன்னத மார்க்கமாகும். இந்நிகழ்வைக் கூட அதற்கு சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.

உலக நேரம் 16 மணிக்கு மேல் உள்ள பகுதியில் நடைபெறும் புவிமைய சங்கமத்தை நாம் எவ்வாறு கணக்கில் எடுக்க வேண்டும் என்பதை ஒரு குழந்தையின் பிறப்பை நாம் பதிவு செய்யும் முறையை அடிப்படையாக வைத்துக் கூட எளிதாகப் புரிந்து கொள்ளலாமே!.

உதாரணமாக ஆஸ்திரேலியாவைச் சார்ந்த ஒரு ஆணுக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணமாகி, தம்பதிகளாக வாழ்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். நிறைமாதக் கர்ப்பிணியான அந்தத் தாய் தன் குழந்தையை தான் வசிக்கும் அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை நண்பகலில் பெற்றெடுக்கிறாள். அன்று பிறந்த அந்த குழந்தையின் பிறந்த நாளையும், (Date of Birth) பிறந்த இடத்தையும் (Place of Birth) கருத்தில் கொண்டு வெள்ளிக்கிழமை அந்தக் குழந்தை பிறந்தது என்று தான் உலகம் முழுவதும் சொல்வோம். இதில் உலகிலுள்ள எவருக்கும் எந்த மாற்றுக் கருத்துகளும் இருக்க இயலாது. பிறந்த தேதியையும், பிறந்த இடத்தை குறிப்பிட்டே ஒரு குழந்தையின் பிறப்பு பதியப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் அந்தப் பெண்ணின் கணவரான அந்த நபர் ''நான் ஆஸ்திரேலியாவைச் சார்ந்தவன், பிறந்த அக்குழந்தை எனக்குப் பிறந்த எனது குழந்தையாகும். அந்தக் குழந்தை அமெரிக்காவில் பிறந்தாலும் குழந்தை பிறக்கும் போது எனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவிற்கு சனிக்கிழமை ஆகிவிட்டது. நான் வசிக்கும் ஆஸ்திரேலியா நாடானது குழந்தை பிறந்த அதே நேரத்தில் சனிக்கிழமையை அடைந்து விட்டதால் குழந்தையின் பிறந்த நாளையும் சனிக்கிழமை என்றே தீர்மானிக்க வேண்டும்' என்று வாதம் எழுப்பினால் அந்த நபரை நாம் என்ன சொல்வோம்?

இன்னும் குழந்தை வெள்ளிக்கிழமை பிறந்ததால் அதற்கு அடுத்த நாளான சனிக்கிழமை அந்த குழந்தைக்கு முதல் நாளாகும். குழந்தை பிறந்த வெள்ளிக்கிழமை பிறந்த நாளாகும் (Day of Birth – Date of Birth) அந்த குழந்தைக்கு ஒன்றாவது (முதல்) நாள் (First day of Birth) சனிக்கிழமையாகும். அதாவது அக்குழந்தை சனிக்கிழமை அன்று தனது வாழ்நாளில் முதல் நாளை முடித்திருக்கும், ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளை முடித்திருக்கும். இப்படி வாரங்கள், மாதங்கள் என்பதை கடந்து வளர்ச்சி பெறும்.

கணக்கின் அடிப்படையில் எந்தக் கிழமையில் குழந்தை பிறந்தாலும், பிறந்த குழந்தைக்கு அன்றைய தினம் எப்போதுமே ZERO (சைபர்) தினமாகவே இருக்கும். அதற்கு அடுத்த நாள்தான் 1 (முதலா)வது தினமாக இருக்கும். இதை எப்படி புரிவது என்றால், குழந்தையின் பிறந்தநாளில் குழந்தை எப்போது பிறந்தது? என்று யாரும் கேட்டால் அக்கேள்விக்கு மணித்துளிகளின் நேர அளவை வைத்தே பதில் கூறுவோம். அதாவது குழந்தையின் பிறந்த நாளின் போது குழந்தை பிறந்து ஒருமணி நேரம் ஆகிறது, அல்லது இரண்டு மணி நேரங்கள் ஆகின்றன என்று மணி நேர அளவிலேயே குழந்தையின் வயது இருக்கும். நாட்களின் எண்ணிக்கையில் நாம் அளவிட்டுக் கூற முடியாது. இதைத்தான் நாம் பிறந்த குழந்தைக்கு அன்றைய தினம் எப்போதுமே ZERO (சைபர்) தினமாகவே இருக்கும் என்கிறோம். எனவே எந்தக் கிழமையில், எந்த இடத்தில், எத்தனை மணிக்கு ஒரு குழந்தை பிறந்தாலும் அக்குழந்தைக்கு அது ZERO (சைபர்) தினத்தில் பிறந்ததாகவே அது கணக்கிடப்படும்.

இதைத் தெளிவாக புரிந்து கொள்வதென்றால் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் அளவு கோளைக் (Ruler Scale) கொள்ளலாம். அதில் முதல் கோட்டில் சைபர் என்று ஆரம்பித்து, அரை சென்டி மீட்டர் என்ற நடுக்கோடிட்டு பிறகு 10-வது கோட்டில் ஒன்று என்று எழுதப்பட்டிருக்கும். அந்த ஒன்றிற்குப் பின்னர் அடுத்த பத்தாவது கோட்டில் இரண்டு என்று எழுதப்பட்டிருக்கும். ஒவ்வொரு 10 கோடுகளும் ஒரு சென்டி மீட்டர் அளவைக் குறிக்கும். ஆக அளவுகோளின் முதல் ஆரம்பம் சைபர் என்றே இருக்கும். இதை வைத்தும் புரிந்து கொள்ளலாம்.

ஆகவே குழந்தை பிறந்த அந்த தினத்தின் தேதியுடன் ZERO (சைபர்) சேர்த்து கூட்டினால் நாளில் எந்த கூடுதலும் அங்கே ஏற்படாது. அதாவது குழந்தை பிறந்த வெள்ளிக்கிழமை சந்திர மாதத்தின் கடைசி நாளான 29வது தினமாக இருந்தால் அந்த குழந்தை பிறந்த தினம் அந்த குழந்தைக்கு ZERO (சைபர்) தினமாகும். அந்த ZERO (சைபர்) தினத்தை 29 தேதிகளுடைய தினங்களுடன் கூட்டினால் தேதியில் எந்த மாற்றமும் வராது. 0+29=29 என்றே கணக்கில் வரும். அதே போல அந்த குழந்தைக்கு முதல் நாளான சனிக்கிழமையுடன் இந்த குழந்தை பிறந்த ZERO (சைபர்) தினத்தை கூட்டினாலும் எந்த மாற்றமும் தேதிகளில் நிகழாது. 0+1=1 ஆகும்.

நபி(ஸல்) அவர்கள் பிறை பிறக்கும் அந்த மறைக்கப்படுகின்ற தினத்தை பழைய மாதத்தில் கூட்டி அடுத்த நாளில் இருந்து புதிய மாதத்தைத் துவங்க நமக்கு வழிகாட்டியுள்ளார்கள் என்ற விரிவான விளக்கங்களை பிறையும் புறக்கண்ணும் என்ற நமது ஆய்வு நூலில் பார்க்கலாம் (LINK).

சந்திரனின் படித்தரங்களை அடிப்படையாக வைத்து ஒரு தேதி நிர்ணயிக்கப்பட்ட ஒருநாளில், ஏதோ ஒரு நேரத்தில், ஒரு இடத்தில் ஒரு குழந்தை பிறப்பதாலேயே இந்தக் கணக்கு முறை நமக்கு தேவைப்படுகின்றது. அந்தக் குழந்தை பிறக்கும் தினத்தில் ஏற்கனவே ஒரு கிழமையும் தேதியும் இருந்து கொண்டே இருக்கும் என்பதை நாம் அறிவோம். இவ்வாறு ஒரு குழந்தையின் பிறப்பு உதாரணத்தை புவிமைய சங்கம தினத்தில் பிறக்கும் பிறையின் பிறப்புக்கு சற்று பொறுத்திப் பாருங்கள். பிறைகளால் அமைந்த நாட்களை கணக்கிடுவதை சுலபமாகப் புரிந்து கொள்ளலாம் என்பதற்காக இதை விளக்கியுள்ளோம்.

மேற்படி குழந்தை பிறப்பு சம்பந்தமான உதாரண விளக்கங்கள் புரிந்து கொள்வதற்காகச் சொல்லப்பட்டவையே. பிறை படித்தரங்களால் அமைந்த சந்திர மாதத்தின் முதல் நாள், அந்த மாதத்தின் மத்தியப் பகுதி மற்றும் அந்த மாதத்தின் இறுதி நாள் என்று சந்திர மாதத்தின் ஒவ்வொரு கிழமையின் எண்ணிக்கையையும் விஞ்ஞானத்தின் துணை கொண்டு மிகத் துல்லியமான அறிந்து கொள்ள முடிந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

எனவே அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை குழந்தை பிறக்கும் முன்பாகவே ஆஸ்திரேலியா சனிக்கிழமைக்குள் சென்று விட்டதால் அந்தக் குழந்தைக்கு சனிக்கிழமைதான் பிறந்தநாள் என்றும், ஞாயிற்றுக் கிழமைதான் அக்குழந்தை தனது முதல்நாளை முடித்துள்ளது என்று யாரும் கூறினால் அவரை அறிவில் குறைந்தவர் என்றே எவரும் கொள்வர். மேற்படி கேள்வியும் இதே இதுபோன்ற தரத்தில் கேட்கப்பட்ட கேள்வியே.

சங்கமம் நடைபெறுவதற்கு முன்னரே புதிய மாதத்தைத் துவங்கச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? என்று விமர்சித்து, சங்கமம் நடைபெறாமல் விடிந்து விடுவதால் விடிந்த அந்த நாளை விட்டுவிட வேண்டும் என்று கூறுபவர்கள் மேற்கூறிய விளக்கங்களை திறந்த மனதோடு சிந்திக்குமாறு வேண்டுகிறோம்.

ஒரு மாதத்திற்குள் இருக்கும் நாட்களின் எண்ணிக்கை விஷயத்தில் கூட்டிக் குறைத்து நம் சுய விருப்பப்படி செயல்பட முடியாது என்பதை உறுதி செய்யும் முகமாக வல்ல அல்லாஹ், தன்னுடைய தூதர் நபி (ஸல்) அவர்கள் மூலம் மாதம் என்பது 29 நாட்களைக் கொண்டதாகவும், 30 நாட்களைக் கொண்டதாகவும் இருக்கும் என்று கட்டளையிட்டுள்ளான். மேலும் கிருஸ்துவ மதப்போதகர் போப் கிரிகோரியன் தயாரித்த நாட்காட்டியில் ஒரு மாதத்தின் எண்ணிக்கையை 28 ஆகவும் 31 ஆகவும் அமைக்கப்பட்டுள்ளது போல அவரவர்கள் சுய விருப்பப்படி மாற்றி அமைத்தால் அது இறை நிராகரிப்பு என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளான். சந்திரனின் படித்தரங்களை அல்லாஹ் உங்களுக்குத் தேதிகளாக ஆக்கியுள்ளான் என்பதையும் அல்குர்ஆன் (2:189) வசனம் மூலம் நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள்.

எனவே 12 மாதங்களில் உள்ள ஒவ்வொரு மாதமும் எத்தனை நாட்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை மனிதன் சுயமாக முடிவு செய்து கொண்டு செயல்படக் கூடாது என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

கிழமை மாற்றத்தை நாம் அறிந்து கொள்வது எப்படி?

கிழமைகளை ஆரம்பிப்பதை அறிந்து கொள்ள இஸ்லாம் என்ன அளவுகோலை நமக்குத் தந்துள்ளது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டுகிறோம். நம் முஸ்லிம் சமூகத்திற்கு வல்ல அல்லாஹ் வெள்ளிக் கிழமையை சிறப்பான நாளாக ஆக்கித் தந்துள்ளான். அன்று மட்டுமே நாம் லுஹர் நேரத்தில் இரண்டு ரக்அத்கள் மட்டும் கொண்ட ஜும்ஆ தொழுகையை தொழுது வருகின்றோம். மற்ற நாட்களில் நான்கு ரக்அத்துகள் கொண்ட லுஹர் தொழுகையை தொழுது வருகின்றோம். ஒரு நாள் எங்கு மாறுகின்றது என்பதை நாம் அறிந்து கொள்ள வியாழக்கிழமையின் லுஹர் தொழுகையும், வெள்ளிக்கிழமையின் ஜும்மா தொழுகையும் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி எவ்விடத்தில் மாற்றப்படுகிறதோ, அவ்விடத்தில்தான் நாட்களும், கிழமைகளும் மாறுகின்றது என்பதை மார்க்க அடிப்படையில் விளங்கிக் கொள்ளலாம். இச்சம்பவத்திற்கு நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான புவியியல் சான்று பகர்கின்றது. அந்த இடம் இப்பூமிப்பந்தில் எந்தப் பகுதியில் உள்ளது என்பதை நாம் ஆராய்ந்தோமானால், அது தற்போது உலகம் ஏற்றுக் கொண்டுள்ள சர்வதேசத் தேதிக்கோடு என்னும் (International Dateline) பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இடத்தில் இருப்பதை திட்டவட்டமாக அறிய முடிகின்றது. புரியும்படி சொல்வதென்றால் அந்த இடமே கிழக்குத்திசையின் துவக்கம் என்று பொருள் கொள்ளலாம்.

அதாவது மக்காவுக்கு கிழக்கில் அமைந்துள்ள நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் தங்களின் தொழுகைக்காக கிப்லாவின் திசையான மேற்கு நோக்கி தொழுகிறார்கள். அதுபோல மக்காவுக்கு மேற்கில் அமைந்துள்ள நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் தொழுகைக்காக தங்களது கிப்லாவின் திசையாக கிழக்குத் திசை நோக்கி தொழுகிறார்கள். கிப்லாவை மையப்படுத்தி இவ்வாறு முழுஉலக முஸ்லிம்களும் அணியணியாக, வரிசையாக நிற்பதாகக் கொண்டால் அவ்வாறு மேற்கு நோக்கித் தொழுபவர்களின் முதுகுப் பகுதியும், கிழக்கு நோக்கி தோழுபவர்களின் முதுகுப் பகுதியும் சங்கமிக்கும் இடமாக இந்த உலகத் தேதிக்கோட்டுப் பகுதி அமையும். இவ்வாறு அல்லாஹ் ஏற்படுத்தித் தந்த கிப்லாவிற்கு முன் சூரியன் உதிக்கும் கிழக்கு பகுதியும், கிப்லாவிற்கு பின் சூரியன் உதிக்கும் மேற்குப் பகுதியும் சந்திக்கும் இடமாக இந்த உலகத் தேதிக் கோட்டுப் பகுதிதான் உள்ளது.

உலகத் தேதிக் கோட்டை மனிதன்தான் ஆய்வு செய்து கண்டுபிடித்தான் என்பது உண்மை என்றாலும் அங்கு தேதியும், தேதிகளோடு முஸ்லிம்களின் தொழுகையும் மாறுவது அல்லாஹ் இந்த மனித சமூகத்திற்கு அளித்துள்ள மாபெரும் அத்தாட்சியாகும்.

நமது கிப்லாவான கஃபாவின் ஹஜருல் அஸ்வத் என்னும் கருப்புக்கல் பதிக்கப்பட்டிருக்கும் மூலையிலிருந்தே நாம் தவாஃபுடைய சுற்றை ஆரம்பித்து அதே இடத்திற்கு மீண்டும் நாம் வரும்போது முதல் சுற்று முடிந்ததாகக் கணக்கிடுகிறோம். அதுபோல உலகத் தேதிக் கோட்டின் மேற்கு பகுதியில் இருந்து கிழமைகள் மாறிவருவதும் அல்லாஹ்வின் அத்தாட்சியில் உள்ளதாகும்.

நாம் வசிக்கும் இந்த பூமியானது மேற்கிலிருந்து கிழக்காக அதன் அச்சில் சுழன்று வருவதால், கிழக்குத் திசையின் ஆரம்பப் பகுதியான உலகத் தேதிக் கோட்டிலிருந்து தினமும் கிழமையைத் துவக்கி, அதன் பின்னர் படிப்படியாக மேற்குத் திசை நோக்கி அதாவது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், பங்களாதேஷ், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், சவுதிஅரேபியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, அமெரிக்கா என்று ஒவ்வொரு நாடுகளும் நுழைய வேண்டும். புதிய கிழமைகளை கிழக்கிலுள்ள உலகத் தேதிக் கோட்டிலிருந்து துவங்கி மேற்கு நோக்கி தினமும் தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதே இறைவன் மனித சமுதாயத்திற்கு வகுத்துள்ள வரைமுறையாகும்.

இவ்வாறு அல்லாமல், 16 UT க்கு மேல் புவிமைய சங்கமம் நடைபெற்றால் கிழக்குப்பகுதி அடுத்த நாளைக்கு சென்று விடுவதால் அந்த நாட்டிலுள்ளோர் மாதத்தில் ஒரு நாளைக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்பதும், அந்த சங்கமம் நடைபெற்ற பின்னர் அடுத்த நாளைக்குள் செல்பவர்கள் அவ்வாறு மாதத்தில் ஒரு நாளைக் கூட்டத் தேவையில்லை என்பதும் மார்க்க அடிப்படையிலும், அறிவியல் அடிப்படையிலும் மிகமிகத் தவறான தத்துவமேயாகும்.

மேற்கண்ட விமர்சனம் சம்பந்தமாக இதுவரை நாம் படித்த விஷயங்களை சுருக்கமாக சொல்வதென்றால்...

1. அல்லாஹ்வோ அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களோ மாதத்தைத் துவங்கவும், ரமழானின் முதல் நோன்பை நோற்கவும் சங்கமம் நடைபெறும்வரை காத்திருங்கள் என்று நமக்குக் கட்டளை இடவில்லை.

2. பிறைகளின் படித்தரங்களைக் கவனிக்குமாறும், அப்பிறைகளை அடிப்படையாக வைத்தே நமது நாட்காட்டியின் தேதிகள் அமைக்கப்பட வேண்டும் என்றே குர்ஆனும் சுன்னாவும் வலியுறுத்துகிறது.

3. புவிமைய சங்கமம் நடைபெறும் முன்பாகவே விடிந்துவிட்ட அந்த நாளை கணக்கிடாமலும், கண்டு கொள்ளாமலும் விட்டுவிட்டு அடுத்தநாளை முதல்நாளாகக் கொள்ளவேண்டும் என்று சொன்னால் அவ்வாறு வேண்டுமென்றே விட்டுச் சென்ற அந்த நாளை எந்த மாதத்தில் கொண்டு சேர்ப்பது? ரமழானிலா, அல்லது ஷவ்வாலிலா?

4. அவ்வாறு சேர்ப்பதாக இருந்தால் எந்த அடிப்படையில் அந்த நாளை குறிப்பிட்ட அந்த மாதத்தில் சேர்ப்பது? இதற்கு மார்க்க ஆதாரம் என்ன?

5. ரமழான் 30-வது நாளில் புவிமைய சங்கமம் என்ற நிகழ்வு உலக நேரம் 16 மணிக்கு மேல் நிகழும் பட்சத்தில், கிழக்கத்திய நாட்டிலுள்ளோர் ரமழான் மாதத்தில் மேலும் ஒரு நாளை கூட்ட வேண்டும் என்றால், 31 நோன்புகள் பிடிக்கவும் நேரிடுமே இதற்கு குர்ஆன், சுன்னா ஆதாரம் எங்கே?

6. இவ்வாறு நாட்களை முன்பின்னாக மாற்றுவதால் மாதங்கள் மாற்றப்படுகின்றன. இவ்வாறு மாதங்களை மாற்றி அமைப்பதையே இறைநிராகரிப்பு (9:37) என்கிறது அல்குர்ஆன். ஒரு மாதத்தின் நாட்களை அவரவர்கள் விருப்பப்படி மாற்றுவது மேற்படி இறை வசனத்திற்கும், மாதம் என்பது 29 அல்லது 30 நாட்களாகவே இருக்க வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கும் மாறுசெய்வதாகாதா?

7. ஒவ்வொரு மாதமும் சங்கமம் என்ற நிகழ்வு உலக நேரம் 16 மணிக்கு மேல்தான் நிகழ்கிறதா? அல்லது ஒவ்வொரு மாதமும் நிகழும் சங்கம தினத்தன்று கிழக்கத்திய நாடுகள் அவ்வாறு விடிந்து அடுத்த நாளுக்குள் சென்று விடுகின்றனவா?

8. அரிதான ஒரு சம்பவத்தை வைத்துக் கொண்டு முஸ்லிம்கள் பெரும்பான்மையினரும் அதன் அடிப்படையில்தான் அமல் செய்ய வேண்டும் என்று பொதுவான மார்க்க சட்டம் வகுப்பதற்கு மார்க்க ஆதாரம் என்ன? அத்தகைய அதிகாரத்தை வழங்கியது யார்?

9. ஒரு தாய் தன் குழந்தையை தான் வசிக்கும் அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை பெற்றெடுக்கும்போது அந்தநாள் கிழக்கத்திய நாடுகளுக்கு சனிக்கிழமையாக இருப்பதால் அக்குழந்தையின் பிறந்த நாள் வெள்ளிக் கிழமையிலிருந்து சனிக் கிழமையாக மாறிவிடுமா?

10. அல்லாஹ் அமைத்த தேதிக்கோட்டின் விதிப்படி ஒரு கிழமை என்பது, சர்வதேச தேதிக்கோட்டில் மாறவேண்டும். இன்னும் ஒரு கிழமைக்கு ஒரு தேதிதான் இருக்க வேண்டும். இவையே நாட்காட்டியின் அடிப்படை விதியாகும். மாற்றுக் கருத்துடையோர் கூறும் நாட்களைக் கூட்டிக் குறைக்கும் தத்துவத்தின் படி இஸ்லாமிய நாட்காட்டியின் மேற்படி விதிகள் மீறப்படுகின்றதே இதற்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து ஆதாரம் தர இயலுமா?

மேற்கண்ட விஷயங்களை நடுநிலையோடு சிந்தித்தாலே குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் அமைந்த ஹிஜ்ரி நாட்காட்டியை எதிர்த்து தவறான தத்துவத்தைக்கூறி கேள்வி எழுப்பியது தவறானது என்பதைத் தெளிவாக அறியலாம். சூரியன், சந்திரன், பூமி இம்மூன்றும் ஒரு தளத்தில் அல்லது ஒரே நேர்கோட்டில் சங்கமிக்கும் புவிமையசங்கமம் என்ற நிகழ்வு உலகநேரம் (UT) எத்தனையில் நடைபெற்றாலும், அது நடைபெறும் அந்தக் கிழமைக்கு அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல் நாள்தான் என்பதை திட்டவட்டமாகப் புரிந்திருப்பீர்கள்.

ஹிஜ்ரி கமிட்டியினராகிய நம்மைப் பொருத்த வரையில் குர்ஆன் சுன்னாவிற்கு ஒத்துப்போகும் விஞ்ஞான கருத்துக்களை மட்டுமே ஏற்றுக் கொள்வோம். நமது மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் குர்ஆனும், சுன்னாவும் மட்டுமே என்பதில் நாம் மிகத்தெளிவாக இருக்கிறோம். விண்ணியல் நிபுணர்கள்(?) என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு இணையதளங்களை நடத்திக் கொண்டிருக்கும் மாற்றுக் கருத்துடைய சில நபர்கள் நம்மையும், நாம் வெளியிட்டுள்ள ஹிஜ்ரி நாட்காட்டியையும் எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு 16+ UT நிகழும் சங்கமத்தை தொடர்பு படுத்தி மேற்கண்ட விமர்சனத்தை எழுப்பினர்.

நாட்காட்டி தயாரித்தல் சம்பந்தமான அடிப்படை விஷயங்களை அறியாமல் இதுபோன்று கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் நாம் முன்னரே விளக்கம் அளித்துள்ளோம் (பார்க்க : www.mooncalendar.in). ஏற்கனவே நாம் விளக்கியுள்ள அக்கேள்விகளில் மாற்று வார்த்தைகளைக் கையாண்டு பழைய கேள்விகளே மீண்டும் புதுப்பிக்கப் பட்டுள்ளதை அறிகிறோம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், மறையும் பிறையை மஃரிபு வேளையில் மேற்குத் திசையில் புறக்கண்களால் பார்த்த பின்னர் அடுத்த நாளை முதல்நாளாகக் கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையில் உள்ள சர்வதேச / சவுதிதேசப் பிறைக் கருத்துடையோரும் மேற்கண்ட விமர்சனத்தை தற்போது கையில் எடுத்துள்ளனர் என்பதுதான். காரணம் இதே கேள்வியை பிறைகளை புறக்கண்களால் பார்ப்பதை மையப்படுத்தி மேற்படி சர்வதேசப் பிறை நிலைப்பாட்டில் உள்ளவர்களிடம் நாம் திருப்பிக் கேட்டால் அவர்களால் தெளிவான பதில் தர இயலுமா என்பதை அவர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

அதாவது 16+ UT இல் அமெரிக்கப் பகுதியில் இவர்களின் நம்பிக்கைபடி ஒரு வெள்ளிக்கிழமையில் பிறை மஃரிபு வேளையில் தெரிகிறது என்று வைத்துக் கொள்வோம். இவர்களின் நிலைப்பாட்டின் படி அது ரமழான் தலைப்பிறை என்றே கொள்வோம். அவ்வாறு வெள்ளிக்கிழமை மஃரிபு வேளையில் அமெரிக்காவில் பிறை பார்க்கப்படும்போது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற கிழக்குப் பகுதியிலுள்ள நாடுகள் விடிந்து சனிக்கிழமையின் பகல் பொழுதில் இருக்கும். அப்போது அந்நாடுகளிலுள்ள முஸ்லிம்களின் நிலைமை என்ன? அந்நாடுகளிலுள்ளளேர் சர்வதேச அமெரிக்க முஸ்லிம்களைப் போல தங்களின் முதல் நோன்பை எவ்வாறு சனிக்கிழமை அன்று துவங்க இயலும்?

அல்லது மேற்படி நாடுகளிலுள்ள மக்கள் ஞாயிற்றுக் கிழமையைத்தான் ரமழான் முதல் நாளாகக் கொள்ள வேண்டுமா? அவ்வாறு கொண்டால் சர்வதேச முஸ்லிம்களுக்கு ரமழான் முதல் நாள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்று இரண்டு கிழமைகளில் வருவது சர்வதேசப் பிறை நிலைப்பாட்டின்படி சரியானதுதானா? என்பதை சர்வதேசப் பிறை கருத்துடையோர் சிந்திக்க வேண்டும்.

அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை பிறை தென்படும்போது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் சனிக்கிழமை என்ற அடுத்த நாளுக்குள் சென்று விட்டதால், பெருநாள் கழித்து அந்நாடுகளிலுள்ளோர் பிடிக்க வியலாது போன அந்த முதல் நாளின் நோன்பை களாச் செய்ய வேண்டுமா? அப்படி களாச் செய்ய வேண்டுமென்றால் அதற்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து நேரடி ஆதாரம் தர இயலுமா?

அவ்வாறு ஒருநோன்பை களாச் செய்ய வேண்டும் என்றால் சர்வதேச பிறை நிலைப்பாட்டின்படி சர்வதேச முஸ்லிம்களில் ஒருசாராருக்கு ரமழான் 30 நாட்களாக இருந்தால் பிறிதொரு சாராருக்கு 29 நாட்களாகவும், அல்லது ஒருசாராருக்கு ரமழான் 29 நாட்களாக அமைந்து விட்டால் பிரிதொரு சாராருக்கு 28 நாட்களாகவும் வருகிறதே இதுதான் சர்வதேசப்பிறை நிலைப்பாடு தந்த பிறைத் தீர்வா? இது சர்வதேசப்பிறை என்ற நிலைப்பாட்டை உலக முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்த முடியாமல் ஏற்பட்ட தோல்வியாகத் தெரியவில்லையா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை நம்மால் தொடுக்கவியலும்.

எனவே ஹிஜ்ரி நாட்காட்டி மிகத் துல்லியமானதுதான், குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் அமைந்ததுதான் என்பதையும், 16+ UT யில் சங்கமம் நடை பெறும் போது சங்கமம் நடைபெறும் வரை கிழக்கத்திய நாடுகளை இஸ்லாம் காத்திருக்கச் சொல்லவில்லை. அந்நாடுகளிலுள்ளோர் சரியான தேதியில் இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் படி நிச்சயமாக தங்கள் அமல்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் அறிந்து கொள்ள வேண்டுகிறோம்.

மேற்படி கேள்விக்கு விளக்கமாக இதுவரை படித்துள்ள விஷயங்களே போதுமானதாகும் என்றாலும் கூடுதலான விளக்கங்களை பெறுவதற்குக் கீழ்க்காணும் துணை தலைப்புகளில் அமைந்த விஷயங்களையும் படித்தறிய வேண்டுகிறோம்.

1) இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன?

2) முஸ்லிம்கள் (தீர்க்கரேகை-Meridian) முன்னோக்கும் திசை பற்றிய விளக்கம்

3) இஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்கிய நேரமண்டல மாற்றங்கள்
 

 

தொடர்ந்து படிக்க :    பாகம் 1,    பாகம் 2,    பாகம் 3,     பாகம் 4

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்....
 



நன்றி : இந்திய ஹிஜ்ரி கமிட்டி

Website : www.mooncalendar.in

[பதிவேற்றிய நாள் : 13-01-2014]
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இறைமார்க்கம் கண்டோர்

Email : info@ottrumai.net


Hilal


Caravan


SECRET SOCIETY


Phase-III


ARRIVAL OF ANTICHRIST


நட்சத்திர பதிவுகள்

பிறையும் புறக்கண்ணும்

வாகனக் கூட்டம் ஹதீஸ்?

தெஹீட்டி பிறை தடுமாறிய சிந்தனை

இஸ்லாமியப் பெயர்கள்

பிரிவுகளை களைந்திடுவோம்!!

அவதார் - ஹாலிவுட் தாக்குதல்கள்

பிறை சமுதாயத்தை பிரிக்குமா?

இளைஞர்களே எச்சரிக்கை!!

முஸ்லிம்கள் செய்ய வேண்டியது

இஸ்லாமியப் பொதுஅறிவு

இறுதிநாள் நெருங்குகிறது

டயானா படுகொலை

நல்ல குழந்தைகள் உருவாக

மறுமை நாளின் அடையாளங்கள்

குழந்தை - ரகசியக் களஞ்சியம்.

த டாவின்ஸி கோட்

வெள்ளத்தின் நுரை, 73 பிரிவு

நாஸ்திக நண்பர்களே! 

மனைவியை மகிழ்விப்பது எப்படி?


 

 

 

 

  

 Best view :1280 by 800 px

         Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved       |    Since 2004