முதல் பக்கம்

ஹிஜ்ரி காலண்டர்

வீடியோ பதிவுகள்

கட்டுரைகள்

வரலாறு

இஸ்லாம்

தமிழ் குர்ஆன்

   

 

Go To Index      

பிறையும் புறக்கண்ணும்!!!

ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா?

பகுதி : 31

சூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம் போதிக்கிறதா?

நபி (ஸல்) அவர்கள் சூரியனை மேகம் மறைக்கும் போது தொழுகை நேரங்களைக் கணக்கிட்டுக் கொண்டார்கள். அதே நேரத்தில் சந்திரனை மேகம் மறைக்கும் போது கணக்கிடாமல் மாதத்தைப் பூர்த்தி செய்யுங்கள் என்றார்கள். எனவே தான் சந்திரக் கணக்கீடு என்ற ஒன்று மார்க்கத்தில் இல்லை என்கிறோம்.

விளக்கம்:

உலக முஸ்லிம்கள் மூன்று வெவ்வேறு நாட்களில் ரமழான் முதல் நாளைத் துவங்குகின்றனர். அதுபோல மூன்று வெவ்வேறு நாட்களில் தனித் தனியாக பெருநாளைக் கொண்டாடுகின்றனர். இந்த அவல நிலையைப் போக்கி குர்ஆன் சுன்னா ஒளியில் சரியான தினத்தில் நமது அமல்களை அமைத்துக் கொள்ள துல்லியமான சந்திர நாட்காட்டி மூலம் சரியானத் தீர்வைச் சொல்கிறோம். இதன் முக்கியத்துவத்தை விளங்காதவர்கள் எழுப்பும் கேள்வியைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு வாரகாலம் மழை பெய்தது சம்பந்தமாக வரும் ஹதீஸை தவறாக இவர்கள் புரிந்து கொண்டதால் ஏற்பட்ட கேள்வியே இது. நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனையால் தொடர் மழை பொழிந்தபோது சூரியனை அந்த ஒருவார காலம் மேகம் மறைத்திருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் தொழகை நேரத்தைக் 'கணக்கிட்டார்கள்'என்று அந்த ஹதீஸில் எங்கே வந்துள்ளது?.

ஒரு வாரம் மழை பெய்து முடிந்த பின்னர் நபி (ஸல்) அவர்கள் தொழுகை நேரங்களை அறிவதற்கு செய்தவை என்ன என்பதை இவர்கள் சிந்திக்கக் கூடாதா?. சூரியனால் ஏற்படும் நிழலின் அளவை வைத்து தானே நேரங்களை முடிவு செய்திருப்பார்கள்.

இவர்களின் வியாக்கியானத்தின் படி மழை பெய்துகொண்டு மேகம் சூரியனை மறைத்தால் மட்டும்தான் தொழுகை நேரங்களைக் கணக்கிட வேண்டும். அதாவது மழை பெய்து கொண்டு மேகம் சூரியனை மறைத்தால் மட்டும்தான் 'அவ்காத்துஸ்ஸலாத்' என்னும் தொழுகை நேரப் பட்டியலை பின்பற்ற வேண்டும். அப்படியானால் தொழுகை கால அட்டவணை என்று ஒரு நேரக் கணக்கை பள்ளிவாயில்களில் வருட முழுவதும் தொங்க விட்டு அதைப் பார்த்து பின்பற்றுவது ஏன்? இவர்களின் வாதத்திற்கு இவர்களே முரண்படுவதை மக்களே நீங்கள் தெளிவாகக் காணுங்கள்.

ஒரு வார காலம் மழை பெய்ததில் சூரியனை மேகம் மறைத்தது என்பது உண்மை. அதே நேரத்தில் சந்திரனை மேகம் மறைத்தால் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை கற்றுத் தந்தது யார்? என்பதை அவர்கள்தான் நமக்கு விளக்க வேண்டும். மேகமூட்டத்தைக் குறிக்கும் எந்தச் சொல்லும் அந்த ஹதீஸில் இல்லையே!

அடுத்ததாக பிறை சம்பந்தமாக வரும் ரிவாயத்துகளில் 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்ற சொற்களில் கும்ம என்ற பதத்திற்கு மேகமூட்டம் என்று அரபு மொழி அறிஞர்கள் என தங்களை கூறிக் கொள்பவர்கள் மொழி பெயர்க்கிறார்கள். இது மிகவும் தவறான மொழிபெயர்ப்பாகும். அதாவது 29 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தை 30 தினங்களாக மாற்றும் சக்தி மேகமூட்டத்திற்கு கொடுக்கப்பட்டிருப்பதைப் போல உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யுங்கள் என்று சர்வ சாதாரணமாக பிரச்சாரமும் செய்கின்றார்கள். மேகமூட்டத்தைக் குறிக்கும் 'கமாம்' என்ற சொல்லோ, 'ஸஹாப்' என்ற சொல்லோ இல்லாத நிலையில், மேகமூட்டம் என்று எப்படி மொழி பெயர்த்தார்கள்?

ஒரு வாதத்திற்காக சர்வதேசப்பிறை நிலைபாட்டின்படி 29-வது நாளின் மாலையில் மேகம் மூட்டமாகி வானத்தை மேகம் மறைத்திருந்தால்தான் அந்த மாதத்திற்கு 30 நாட்களாக முடிவு செய்ய முடியும். இந்நிலையில், சர்வதேசப் பிறை கருத்துடைய இயக்கத்தினர் தயாரித்து வெளியிடும் நாட்காட்டிகளில் இன்னின்ன மாதங்கள் 29 நாட்களில் முடிகின்றது என்றும், இன்னின்ன மாதங்கள் 30 நாட்களில் முடிகின்றது என்றும் எவ்வாறு முற்கூட்டியே அச்சிட முடிகிறது? ஒவ்வொரு மாதத்தின் 29-வது நாள் பின்னேரம் வரவேண்டிய மேகக்கூட்டங்கள் இவர்கள் காலண்டர் தயாரிப்பதற்காக வருட துவக்கத்தில் மொத்தமாக வந்து விட்டனவா? - யாமறியோம். இன்னும் இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் துல்லியமான பிறைக் கணக்கீடு ஹராம் என்றால் இவர்கள் இயக்கத்தின் சார்பில் குத்துமதிப்பாக, தோராயமாகக் கணக்கிட்டு நாட்காட்டி வெளியிடுவது ஹராம் இல்லையா?

ஒவ்வொரு மாதமும் இறுதிவாரத்தில் தேய்பிறைகள் அனைத்தும் ஃபஜ்ர் வேளையில் கிழக்குத் திசையில்தான் தெரியும் என்பதை பிறைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்கள் அறிந்திருப்பர். அறிவியல் பூர்வமான நிரூபிக்கப்பட்ட உண்மையும் அதுதான். இந்நிலையில் மாதத்தின் 29-ஆம் நாளன்று மஃரிபு வேளையில் பிறை மேற்குதிசையில் தெரியும் என்று மேற்படி அரபு மொழி பயின்ற அறிஞர்களுக்கு சொன்னது யார்? எந்த ஆதாரத்தை வைத்து மக்களிடம் இவர்கள் பிரச்சாரம் செய்கின்றார்கள்? என்ற கேள்விக்கு மாற்றுக் கருத்துடைய அவ்வரபு மொழியறிஞர்கள்தாம் பதில் தரவேண்டும்.

இன்னும் மாதத்தின் 29-ஆம் நாளன்று மேகமூட்டமாக இல்லாமல் வானம் மிகத்தெளிவாக இருந்து பிறையும் தென்படவில்லை என்றால் என்ன செய்வது? அந்த மாதத்தை இருபத்து ஒன்பது நாட்களில் நிறுத்திக் கொள்வதா? அல்லது முப்பதாக பூர்த்தி செய்வதா? உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யுங்கள் என்ற ஹதீஸ் வாசகத்தை வைத்து எப்படி சட்டம் எடுப்பது? போன்ற கேள்விகளுக்கும் அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

நாங்கள் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் பிறந்த பிறையைத் தேடிப் பார்ப்போம் என்று ஒரு பதிலை அவர்கள் சொல்லலாம். அப்படி சொல்வார்களேயானால், சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் இவர்கள் சொல்லும் 29-ஆம் நாளன்று மேகமூட்டமாக இல்லாமல் வானம் மிகத்தெளிவாக இருந்து பிறையும் தென்படவில்லை என்று வைத்துக் கொண்டு நமது கேள்வியை சற்று சிந்திக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
ஒரு ஹதீஸை ஆய்வு செய்வதாக இருந்தால் அது சம்பந்தமான ரிவாயத்துகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பு உங்களுக்கு மறைக்கப்படும்போது என்பதாகும். மறைக்கப்படும்போது என்ற இந்தச் சொல் மறைக்கப்பட்டால் என்ற சந்தேகமான பொருள்படும் சொல் அல்ல. மாறாக மாதத்தில் இறுதிநாளில் சந்திரனின் ஒளி பூமிக்கு காட்சி தராமல் நிச்சயமாக மறைக்கப்படுமே அந்நாளில் என்ற பொருளில் கையாளப்பட்ட ஒரு சொல்லாகும் என்பதையும் அறியத் தருகிறோம்.





 

 


 

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்....
 



நன்றி : இந்திய ஹிஜ்ரி கமிட்டி

Website : www.mooncalendar.in


 

 


 

 

 

 

 

Download Section

   Free Quran Software
   Dajjal Arrivals
   Harun Yahya
   Understand Islam
   Quran Miracles
   Islam & Terrorism
   Children Section
   Articles
   Miscellaneous
  

 

 

 
 

Copyright © WWW.OTTRUMAI.NET. All Rights Reserved